tamilnadu

img

பேரறிவாளன் விடுதலை: நீண்ட சட்டப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!

பேரறிவாளனின் விடுதலை நீண்ட சட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

கடந்த முப்பது ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என தாக்கல் செய்திருந்த மனுவின் மீதான விசாரணைகளை மேற்கொண்ட உச்சநீதிமன்றம் இன்று அவரை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்திருக்கிறது. தமிழக சட்டமன்றத்தில் பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக ஒரு  தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிய பிறகும், அவர் அதன் மீது எவ்வித முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததோடு, அத்தீர்மானத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தார். தமிழக அரசும், பல்வேறு அரசியல் கட்சிகளும், மக்களும் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்ததையும் தமிழக ஆளுநர் கண்டுகொள்ளவில்லை.

                இந்நிலையில் இந்த வழக்கின் மீதான விசாரணையில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், பொதுவாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களை விடுவிக்கும் பிரச்சனையென்பது குடியரசு தலைவரின் வரம்பிற்குள் வருகிற ஒன்றல்ல என விளக்கம் அளித்ததோடு, ஆளுநருக்கு சிறப்பு அதிகாரமளிக்கும் பிரிவு 161 ன் படி முடிவெடுக்க ஆளுநர் காலம் தாழ்த்தியதால், அரசியல் சாசன சட்டப் பிரிவு 142 ஐ பயன்படுத்தி உச்சநீதிமன்றமே அவரை விடுதலை செய்வதாக அறிவித்திருக்கிறது. மேலும், மாநில சட்டமன்றங்கள் நிறைவேற்றும் முடிவுகளை ஆளுநர்கள் நிறுத்தி வைக்க முடியாது எனவும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளது.  நீண்ட காலமாக இப்பிரச்சனையை ஒருவித உள்நோக்கத்தோடு இழுத்தடித்த ஆளுநருக்கும், பாஜக ஒன்றிய அரசுக்கும் தலையில் வைக்கப்பட்ட குட்டாகவும் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அமைந்திருக்கிறது.

                நீண்ட காலமாக நடைபெற்ற வந்த இந்த வழக்கில் கிடைத்திருக்கும் தீர்ப்பு என்பது பேரறிவாளனுக்கும், அவரது தாயாரான அற்புதம்மாள் அவர்களுக்கும், அவர்களுக்கு ஆதரவாக களத்தில் போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயக அமைப்புகளுக்கு கிடைத்த வெற்றியாகும். மாநிலத்தின் உரிமைகளை நிலைநாட்டும் வகையில் வலுவான வாதங்களை உச்சநீதிமன்றத்தில் முன்வைத்த தமிழக அரசின் பங்களிப்பும் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். விடுதலை செய்யப்பட்டுள்ள பேரறிவாளனுக்கும், அவரது தாயாருக்கும், அவர்களுக்கு ஆதரவாக சட்டப்போராட்டத்தில் துணை நின்ற தமிழக அரசுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் இவ்வழக்கில் நீண்ட காலமாக சிறையில் உள்ள மற்றவர்களையும் விடுதலை செய்வதற்கான முடிவையும் தமிழக அரசு எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கிறது இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

;