ஆணவக் கொலையை விபத்தாக மாற்றம்: கே.பாலகிருஷ்ணனிடம் பெற்றோர் முறையீடு
கடலூர், ஆக.11- தனது மகன் வேறு சாதி பெண்ணை காதலித்ததால் ஆணவக் கொலை செய்து விட்டு விபத்து நடந்தது போல் செய்து விட்டனர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணனிடம் பெற்றோர் முறையிட்டனர். விருத்தாசலத்தை அடுத்த அரசகுழி கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன், ஜெயா தம்பதியினர் கடலூரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பால கிருஷ்ணனை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:- தமது மகன் வே.ஜெயசூர்யா (19) விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் எங்கள் மகன் ஜெயசூர்யா, கடந்த மே 18 ஆம் ஞாயிற்றுக்கிழமை குள்ளஞ்சாவடி அருகே விபத்தில் இறந்துவிட்டதாக தகவல் வந்தது. ஆனால், மகனைப் பார்க்கவே எங்களை அனுமதிக்கவில்லை. எங்களிடம் புகார் கொடுங்கள் என்று கையெழுத்து பெற்றுவிட்டு பிரேத பரிசோதனை செய்துவிட்டனர். போலீசார் முன்னுக்குப் பின் முரணாக எங்களிடம் தகவல் தெரிவித்தனர். விபத்து நடந்த இடமும் சித்தரிக்கப்பட்டது போல் இருந்தது. பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த எங்கள் மகன் வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்ததால் திட்டமிட்டு ஆணவக் கொலை செய்துவிட்டு விபத்து போல் நாடகம் நடத்தியுள்ளனர். எங்கள் மகன் மரணத்திலும் நடந்த விதத்திலும் எங்களுக்கு வலுவான சந்தேகம் உள்ளது. இது உண்மையிலேயே ஆணவக் கொலைதான். இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தை அணுகி சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு பெற்றுள்ளோம் என்று தெரிவித்தனர். இது குறித்து ஆலோசித்து சிபிஎம் சார்பில் கண்டன இயக்கங்களுக்குச் செல்வோம் என்று ஜெயசூர்யாவின் பெற்றோரிடம் கே.பாலகிருஷ்ணன் உறுதியளித்தார்.