பாகூரில் தொடர்மழையால் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்
புதுச்சேரி, அக்.21- புதுச்சேரியில் பெய்து வரும் தொடர் மழையால் பாகூரில் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியது. வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் புதுச்சேரியில் கடந்த இரண்டு தினங்களாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்நிலையில் தீபாவளி அன்று துவங்கிய மழைதூரல் செவ்வாய்க்கிழமை தொடர்ந்து கனமழையாக பெய்தது. பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால் கடலூர் மாவட்டத்தையொட்டியுள்ள புதுச்சேரி விவசாய பகுதியான பாகூரிலும், விழுப்புரம் மாவட்டத்தையொட்டி உள்ள திருக்கனூர், மண்ணாடிபட்டு ஆகிய பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியது. விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை அமைக்கப்பட்டுள்ள புதிய தேசிய நெடுஞ்சாலை பாகூர் வழியாக அமைக்கப்பட்டு உள்ளதால், முறையான வடிகால் வசதியை ஏற்படுத்தாத நிலை உள்ளது என்று அப்பகுதியில் உள்ள விவசாயிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர். எனவே எதிர்வரும் காலங்களில் மழை நீர் வெளியேறும் வகையில் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும் புதுச்சேரி மாவட்ட நிர்வாகத்திற்கு அகில இந்திய விவசாயிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. வீட்டிலேயே முடங்கி பொதுமக்கள் புதுச்சேரி நகர பகுதியில் செவ்வாய்க்கிழமை தொடர்ந்து மழை பெய்ததால் சாலையோர வியாபாரிகளும், கூலித் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தீபாவளி பண்டிகையெட்டி தொடர் அரசு விடுமுறை என்பதால் பெரும்பாலான மக்கள் வெளியே வரவில்லை. வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தது. தாழ்வான பகுதியான கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர்,வெங்கடா நகர், பூமியான்பேட்டை, லாஸ்பேட் கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். புதுச்சேரி சுற்றுலா பகுதி என்பதால் தொடர் விடுமுறை நாட்களை கழிக்க வந்த சுற்றுலாவாசிகள் மழையால் விடுதியிலேயே முடங்கி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
