tamilnadu

img

ஒன்றிய பட்ஜெட், மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு

சென்னை, ஜூலை 25- ஒன்றிய அரசின் மக்கள் விரோத பட்ஜெட் - மாநில அரசின் மின் கட்டண உயர்வைக் கண்டித்து வியாழனன்று (ஜூலை 25) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வியாழனன்று மாநிலந் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநி லங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில அரசுகள் கோரும் நிதியை வழங்க வேண்டும்; ஒவ்வொரு ஆண்டும் நுகர்வோர் குறியீட்டெண் உயர்வுக்கு ஏற்ப மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மாநில அரசுகளை கட்டாயப்படுத்துவதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்; அனைத்துத் தரப்பு மக்களையும் கடுமையாக பாதிக்கும் மாநில அரசின் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும், தேர்தல் வாக்குறுதிபடி மாதந்தோறும் மின் அளவு கணக்கிடும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும், தமிழ்நாட்டிற்கு தேவையான மின்சாரத்தை மாநில அரசே உற்பத்தி செய்யும் வகையில், புதிய மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்த வேண்டும், அதானி நிறுவனத்திற்கு வழங்கும் அதீத கொள்முதல் விலையை குறைக்க வேண்டும், ஒன்றிய அரசின் தனியார்மய மாக்கலுக்கு மாநில அரசு இரையாகக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இவற்றில் மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு, கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்களை எழுப்பி, போராட்டம் நடத்தினர்.

இதன் ஒருபகுதியாக கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழு சார்பில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.  ராமகிருஷ்ணன் கண்டன பங்கேற்று உரை யாற்றினார். தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர். வேல்முருகன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஏ.  பாக்கியம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கள் க. பீம்ராவ், மாவட்டக்குழு உறுப்பினர் கள் ஹெலன் தேவ கிருபை, ஜி. வெங்கடே சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதேபோல நடைபெற்ற ஆர்ப்பாட்டங்  களில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள்  பி.சம்பத் மத்திய சென்னையிலும், பெ.சண்முகம் தஞ்சாவூரிலும் பங்கேற்றனர்.

நலத் திட்ட நன்மைகளை பறிக்கும் மின் கட்டண உயர்வு

ஆர்ப்பாட்டத்தில் ஜி. ராமகிருஷ்ணன் பங்கேற்றுப் பேசுகையில், “உதய் திட்டத்தின்படி ஆண்டுதோறும் ஜூலை மாதம் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மாநில அரசுகளை ஒன்றிய அரசு கட்டாயப்படுத்துகிறது” என்பதைச் சுட்டிக்காட்டி, “இதனால் தற்போதைய மாநில அரசு அடுத்தடுத்து கட்டணத்தை உயர்த்தி உள்ளது; இதனால் மிக்சி, கிரைண்டர் வைத்துள்ள ஒரு கட்டுமானத் தொழிலாளி, 2 மாதத்திற்கு ஒருமுறை 470 ரூபாய் கட்டணம் செலுத்திய நிலையில், கட்டண உயர்வுகளுக்கு பிறகு 1060 ரூபாய் செலுத்துகிறார். ஏசி, பிரிட்ஜ், மிக்சி வைத்துள்ள நடுத்தரக்  குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் 1100 ரூபாய் கட்டிய நிலையில் 1900 ரூபாய் செலுத்த வேண்டி உள்ளது. டீக்கடை வைத்துள்ள ஒரு வணிகர் 1400 ரூபாய் கட்டி வந்த நிலையில் 2400 ரூபாய் செலுத்துகிறார்” என்று தெரிவித்தார். மேலும், “மகளிர் உரிமைத் தொகை போன்ற மக்கள் நலத்திட்டங்களை தமிழக அரசு அமல்படுத்துகிறது. நலத் திட்டங்களால் அளிக்கப்படும் சலுகைகள் மின்கட்டண உயர்வு போன்றவற்றால் பறிக்கப்பட்டு விடக் கூடாது.  எனவே, ஏழை - எளிய உழைப்பாளிகள், நடுத்தர மக்கள், சிறு வணிகர்களைக் கடுமையாக பாதிக்கும் மின்கட்டண உயர்வை அரசு திரும்பப் பெற வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.