tamilnadu

மாட்டிறைச்சி கடைக்கு எதிர்ப்பு.... மக்கள் ஒற்றுமை மேடை கண்டனம்....

சென்னை:
கும்பகோணத்தில் மாட்டிறைச்சிக் கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள, மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் இந்து மத அமைப்புகளின் நடவடிக்கைக்கு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பேரா. அருணன், க.உதயகுமார் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-கும்பகோணம் ஜான் செல்வராஜ் நகரில் “ரஹ்மத் பீஃப் ஹவுஸ்” என்ற பெயரில் மாட்டிறைச்சிக்கடை திறக்கப்பட்டுள்ளது. இந்தக் கடையை இழுத்து மூட வேண்டும் என்று கிளம்பியிருக்கிறது இந்து மக்கள் கட்சியின் இளைஞர் அணி. கடையின் முன்பு ஆகஸ்டு 6 ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என்றும், அதில் பாஜக தலைவர்களில் ஒருவராகிய எச்.ராஜா, இந்து மக்கள்கட்சியின் தலைவர் அர்ஜூன்சம்பத் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் அது அறிவித்துள்ளது. மாட்டிறைச்சி உண்பதும் உண்ணாததும் அவரவர் விருப்பம். மாட்டுக் கறியே விற்கக் கூடாது என்பது மக்களின் உணவு உரிமை மீது கை வைக்கும் அநீதிச் செயல்.ஆர்எஸ்எஸ் பரிவாரம் இதில் இறங்கியிருப்பது மாடுகளின் பெயரால் மனிதர்களுக்கு இடையே பகைமையை மூட்டுவதற்காக, அதன் மூலமாக மக்கள் ஒற்றுமையை சீர்குலைப்பதற்காக, அரசியல் ஆதாயத்திற்காக இத்தகைய ஈனச் செயலில் இறங்குவதை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வன்மையாகக் கண்டிக்கிறது. சமூக நல்லிணக் கத்தை கெடுக்க முயலும் இந்து மக்கள் கட்சியினர் மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறது.

மக்களின் மெய்யான பிரச்சனைகளிலிருந்து திசைதிருப்பும் சங்பரிவாரத்தின் வேலைக்கு யாரும், குறிப்பாக இந்துக்கள் பலியாகக் கூடாது என்றும் மேடை வேண்டுகிறது. மாடுகள் மீதான பிரியத்தால் இவர்கள் மாட்டுக்கறிக் கடையை எதிர்க்கவில்லை என் பதை அவர்கள் உணர வேண்டும். இந்தியாவிலிருந்து மாட்டிறைச்சி ஏற்றுமதி மோடி ஆட்சியில்தான் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. அதிலும் அந்தக் கம்பெனிகளில் பல இந்துக்களால் நடத்தப்படுகிறது. இதை ஆதரிப்பவர்கள்தாம் ஒரு சிறிய மாட்டிறைச்சி கடையை எதிர்க்கிறார்கள் என்பதிலிருந்து இவர்களின் இரட்டை வேடத்தைஅறிந்து இத்தகைய அநியாய போராட்டத் திற்கு ஆதரவு தரக் கூடாது என்றும் மேடை கேட்டுக் கொள்கிறது.

தமிழில் அர்ச்சனைக்கு வரவேற்பு
தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை  நடப்பது இயல்பானது. ஆனால் இங்கே ஆகமக் கோயில்கள் எனப் படும் பெரும் கோயில்களில் சமஸ்கிருதத்தில் தான் நடக்கிறது. இதை மாற்றுவதற்காக “அன்னைத் தமிழில் அர்ச்சனை” எனும் ஏற்பாட்டை புதிதாக அமைந்துள்ள திமுக அரசு நடைமுறைப்படுத்துகிறது. தமிழின் வழிபாட்டு உரிமையை மீட்டெடுக்கும் இந்த நற்செயலை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை உற்சாகமாக வரவேற்கிறது.ஆனால், தாங்கள் இந்து சமயத்திற்காகவும், இந்துக்களுக்காகவும் இருப்பதாகச் சொல்லும் பாஜக உள்ளிட்ட சங் பரிவாரத்தினர் இதை வரவேற்கவில்லை என்பதைக் கவனிக்க வேண்டியுள்ளது. பிற மதத்தவர் போல இந்துக்களும் தமிழர்கள்தாம். அவர்களது மொழி கோயில் கருவறையில் ஒலிக்கப் போவதை “திமுகவின் தமிழில் அர்ச்சனை என்பது அரசியல்” என்று கொச்சைப்படுத்துகிறார் பாஜகவின் மாநிலப் பொருளாளர். இதிலிருந்து இவர்கள் தமிழ் விரோதிகள் என்பதை தமிழ் இந்துக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் மேடை கேட்டுக் கொள்கிறது.இவ்வாறு தெரிவித்திருக்கிறார்கள்.

;