tamilnadu

சிஏஏ போராட்ட வழக்குகள் ரத்து... முதல்வருக்கு மக்கள் ஒற்றுமை மேடை நன்றி....

சென்னை:
இந்திய ஒன்றிய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழ்நாட்டில் போராடிய மக்கள் மீது மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் மீது கடந்த அதிமுக அரசு புனைந்த அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்த முதலமைச்சருக்கு தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை நன்றி தெரிவித்து.இதுகுறித்து அந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பேரா.அருணன், க.உதயகுமார் ஆகியோர் விடுத்திருக்கும் அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிட ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள திமுக அரசும் முதல்வர் மு.க. ஸ்டாலினும் துணிந்து செயல் பட்டு வருவது பாராட்டத்தக்கது.அதிமுக ஆட்சியின்போது நியாயமான கோரிக் கைகளுக்காகப் போராடிய பல்வேறு தரப்பினர்கள் மீது பொய் வழக்குகளைப் புனைந்து அவர்கள் போராட்டங்களை நசுக்க முயற்சி செய்தது. இந்நிலையில், தற்போது ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள திமுக அரசு அந்தப் பொய் வழக்குகளை எல்லாம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது மக்களிடம் பெரும் ஆதரவை பெற்று வருகிறது.

அதிமுக ஆட்சியின் துணையோடு கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழக மக்கள் குறிப்பாக சிறுபான்மையினர் பெரும் பெரும் போராட்டங்களை நடத்தினர். தமிழக மக்கள் ஒற்றுமை மேடையும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மாநிலம் தழுவிய அளவில் பல்வேறு போராட்டங்களை நடத்தியது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெற்ற குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.அந்த போராட்டங்களை ஒடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அன்றைய அதிமுக அரசு பல்வேறு போராட்டங்களில் பொய் வழக்குகளை போட்டிருந்தது. தற்போது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் அனைவர் மீதும் தொடுக்கப் பட்டுள்ள வழக்குகளை வாபஸ் வாங்குவதாக சட்டப்பேரவையில் அறிவித்திருப்பதை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை மனதார வரவேற்பதுடன், தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.அத்துடன் தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டுவருவோம் என அறிவித்துள்ளதும் பாராட்டுக்குரியது. வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே அதற் கான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டுமென மேடை சார்பில் தமிழக அரசை கேட்டுக் கெள்கிறோம்.இவ்வாறு தெரிவித்துள்ளனர்.