சென்னை:
பக்தர்கள் மத்தியில் நோய் பரவல் பற்றி கவலைப்படாத சங்பரிவாரத்திற்கு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மேடையின் ஒருங்கிணைப்பாளர்கள் பேரா. அருணன், க. உதயகுமார் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: கொரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலை எந்த நேரத்தில் வீசுமோ எனும் அச்சம் உள்ள சூழலில் தமிழ்நாடு அரசு சில கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. வருகிற பண் டிகை காலத்தில் மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்கும் வகையில் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு ஒன்றிய அரசும் மாநில அரசுகளை அறிவுறுத்தி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.இந்த அடிப்படையில்தான் மதப் பண்டிகைகளுக்கும் கட்டுப்பாடுகளை பல மாநில அரசுகள் விதித்துள் ளன. உதாரணமாக மகாராஷ்டிரா, கர்நாடகா அரசுகள் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை விதித்துள்ளன. தமிழ்நாடு அரசும் விநாயகர் சதுர்த்தியை வீட்டுப் பண்டிகையாகக் கொண்டாடும்படியும், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து அவற்றை ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைப்பதை தவிர்த்திடுமாறும் கேட்டுக் கொண் டுள்ளது. இதன் நோக்கம் தமிழக மக்கள் மத்தியில் கொரோனா தெற்று பரவிவிடக் கூடாது என்பதுதான். ஆனால் இந்த நல்ல நோக்கத்தை சிதறடிக்கும் வகையில் விநாயகர் சிலைகளை பொதுஇடங்களில் வைத்து கூட்டத்தைக் கூட்டுவோம், அவற்றை ஊர்வலங்களாக எடுத்துச் சென்று கரைப்போம் என்று வீம்பு செய்கின்றனஆர்எஸ்எஸ் பரிவாரத்தைச் சார்ந்த சில அமைப்புகள். இதை ஒன்றியத்தின் ஆளுங்கட்சியாகிய பாஜகவும் ஆதரிப்பது அதற்கு தமிழக மக் கள் மீது அக்கறை இல்லை என்பதை மட்டுமல்லாது ஒன்றிய பாஜக அரசின் உத்தரவை அது மதிக்கவில்லை என்பதையும் உணர்த்துகிறது. சங் பரிவாரத்தினர் தாங்கள் இந்துக்களுக்காக இருப்பதாகச் சொல்லுகிறார்கள். ஆனால் உண்மையில் இவர்கள் மதவெறி அரசியலுக்காக இருக்கிறார்களே தவிர தமிழக மக்களுக்காக இல்லை என்பதை இவர்களின் இந்தப் போக்கு உணர்த்துகிறது.
பக்தர்கள் மத்தியில் கொரோனா பரவினாலும் பரவாயில்லை விநாயகரை வைத்து தாங் கள் ஆண்டுதோறும் செய்துவந்த பிறமதத்தவருக்கு எதிரான கலவர அரசியல் இந்த ஆண்டும் தொடர வேண்டும் என்று நினைக்கிறார்கள். மதுரை கள்ளழகர் திருவிழா உள்ளிட்ட பல இந்து விழாக்களும் அரங்க விழாக்களாக நடத்தப் பட்டதை எதிர்க்காதவர்கள் விநாயகர் ஊர்வலத்திற்காகக் கொந்தளிப்பது இவர்களின் இந்த தீயநோக்கத்தைக் காட்டுகிறது. 1980களுக்கு முன்பு வரை விநாயகர் சதுர்த்தியானது வீட்டுப் பண்டிகையாகத்தான் நடந்து வந்தது என்பதையும், அதற்குப்பிறகு சங் பரிவாரம் தான் இதை இப்படித் தங்களுக்கு ஆள் சேர்க்கும் விழாவாக மாற்ற முனைந்தது என்பதும் நினைவுகூறத் தக்கது.
எனவே தமிழக மக்கள் மத்தியில் நோய் பரவாமல் தடுக்க அதை வீட்டு விழாவாகக் கொண்டாடும் படி மாநிலஅரசு செய்துள்ள அறிவிப்பை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வரவேற்கிறது, சங் பரிவாரத்தின் ஊர்வல ஏற்பாட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை இவர்களது விதவிதமான மிரட்டல்களுக்கு பணியாமல் கறாராக அமுல் படுத்துமாறு அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.விநாயகர் மீதான பக்தியால் அல்ல, மதக்கலவர புத்தியால்தான் சங் பரிவாரிகள் முரண்டு பிடிக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும், மதநல்லிணக்கத்தைக் கெடுக்கும் இவர்களின் சதிகார அரசியல் விளையாட்டை ஆதரிக்க கூடாது என்றும், நோய் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் தமிழக மக்களை மேடை உரிமையோடு கேட்டுக் கொள்கிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.