என்எல்சி பாதுகாப்பு அதிகாரி மது போதையில் விவசாயி மீது தாக்குதல்
கடலூர், ஆக.19- என்எல்சி நிறுவனத்தின் தொழிலக பாதுகாப்பு அதிகாரி மது போதையில் வளையமாதேவி கிராமத்தில் சேர்ந்தவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளார். கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், அவரை போலீசார் கைது செய்துள்ளனர். வளையமாதேவி கிராமத்தைச் சேர்ந்த உடல் நலம் பாதிக்கப்பட்ட சீனிவாசன் என்பவர் என்எல்சி நிறுவனத்தில் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது என்எல்சி மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் இது என்எல்சிக்கு சொந்தமான இடம், இங்கு வரக்கூடாது என எச்சரித்துள்ளார். இதனால், இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, மத்திய பாதுகாப்பு படை அதிகாரி, சீனிவாசனை சரமாரியாக கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால், ரத்த காயங்களுடன் சம்பவ இடத்தில் மயங்கி விழுந்துள்ளார் சீனிவாசன். இதனையறிந்த கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு வந்து மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிகாரியிடம் வாக்குவாதில் ஈடுபட்டனர். இந்த தகவலை அறிந்து சேத்தியாதோப்பு போலீசார் விரைந்து வந்து கிராம பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மது போதையில் இருந்த என்எல்சி பாதுகாப்பு படை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், காவல்துறையினர் நடத்திய சோதனையில் அதிக அளவு மது அருந்தி இருப்பது தெரிய வந்தது. உடனே அவரை கைது செய்தனர். வளையமாதேவி கிராமத்தில் என்எல்சி நிர்வாகம் உரிய இழப்பீடு, வேலைவாய்ப்பு வழங்காமல் நிலங்களை எடுத்துக் கொண்ட நிலையில், விவசாய நிலங்களை இழந்து நிற்கும் விவசாயிகள் மீது என்எல்சி நிர்வாகத்தின் போதை அதிகாரிகள் கொலை வெறி தாக்குதல் நடத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று கிராம மக்கள் தெரிவித்தனர். மேலும், மாவட்ட நிர்வாகமும், என்எல்சி நிர்வாகமும் தலையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயி சீனிவாசனுக்கு உரிய இழப்பீடு மற்றும் மருத்துவச் செலவுகளை வழங்க வேண்டும் என்றும் போராட்டம் நடத்தினர்.
பண்ருட்டியில் ஒரே குடும்பத்தில் மூன்று பேர் தற்கொலை!
கடலூர், ஆக.19- கடலூர் மாவட்டம், பண்ருட்டி இந்திரா காந்தி நகரை சேர்ந்தவர் ராஜா (40) விவசாயி. இவர், மனைவி மற்றும் மகன், மகளுடன் வசித்து வந்தார். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக ராஜாவின் மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். மகன் மற்றும் மகளுடன் ராஜா வசித்து வந்த நிலையில்,மனமுடைந்த ராஜா செவ்வாய்க்கிழமை (ஆக.19) தனது மகன் குமரகுரு (12), மற்றும் மகள் தன்யாஶ்ரீ (7) ஆகியோர் ஒரே கயிற்றில் தூக்கு போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். நண்பர்களுக்கு தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பி விட்டு அவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் நண்பர்கள் போலீசார் துணையுடன் வீட்டிற்கு சென்று மூவரின் உடலையும் மீட்டனர். இந்த சம்பவம் குறித்து ராஜாவின் மனைவியிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தில் மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பண்ருட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.