சென்னை, மே 10-பிரபல எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான தோப்பில் முகமது மீரான் உடல்நலக் குறைவால் வெள்ளியன்று (மே 10) காலமானார். கன்னியாகுமரி மாவட் டம் தேங்காய் பட்டினத்தில் 1944 ஆம் ஆண்டு பிறந்தவர் தோப்பில் முகமது மீரான் (74). இவர் பல்வேறு புதினங்கள், சிறுகதை தொகுப்புகள், மொழிபெயர்ப்பு நூல்களை எழுதியுள்ளார்.சாய்வு நாற்காலி என்ற நாவலுக்காக 1997-ல் சாகித்ய அகாடமி விருது பெற்றவர். நெல்லை மாவட்டம் பேட்டை பகுதியில் வசித்து வந்த இவர் வெள்ளியன்று (மே 10) காலை உடல்நலக் குறைவால் காலமானார். மீரானுக்கு மனைவி மற்றும் 2 மகன் கள் உள்ளனர்.அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தோப்பில் முகமது மீரான் உடல் நெல்லை பேட்டையில் உள்ள பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டது.எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திராவிடர்கழக தலைவர் கி.வீரமணி உள்பட பல்வேறு கட்சியினர், எழுத்தாளர்கள், கவிஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமுஎகச இரங்கல்
தமுஎகச மாநிலத்தலைவர் சு.வெங்கடேசன், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்ட இரங்கல் செய்தி:கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய் பட்டினம் என்னும் கடலோர கிராமத்தில் 26.09.1944 அன்று பிறந்த தோப்பில் முகமது மீரான், கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக, திருநெல்வேலியில் வசித்து வந்தார். கடலோர கிராமத்தின் கதை, கூனந்தோப்பு, துறைமுகம், அஞ்சு வண்ணம் தெரு, குடியேற்றம் உள்ளிட்ட நாவல்களை எழுதிய தோப்பில், குறிப்பிடத் தக்க சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவருடைய “சாய்வு நாற்காலி” என்ற நாவலுக்கு 1997-ஆம் ஆண்டு “சாகித்ய அகாடமி விருது” கிடைத்தது. இஸ்லாமிய சமூக அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை நுட்பமாக பதிவு செய்தவர் தோப்பில். இஸ்லாமிய பழமைவாதத்திற்கு எதிராக தனது கருத்துக்களை துணிச்சலுடன் முன்வைத்தவர். மலையாள இலக்கியத்திலும் பரிச்சயம் கொண்டிருந்ததால் அடிக்கடி கேரள பல்கலைக் கழகங்களில் உரையாற்றுவதற்காக அழைக்கப்படுகிறவராக இருந்தார். இளம் படைப்பாளிகளுடன் நெருக்கமாகப் பழகும் பண்புள்ளவர். மரணம் அவரை எழுத்தாகவும் நினைவாகவும் இன்று மாற்றிவிட்டது பெருந்துயரமே.கடந்த 35 ஆண்டுகளாக தன்னுடன் நெருங்கிய தோழமை கொண்டிருந்த தோப்பில் முகமது மீரான் அவர்களின் மறைவுக்கு தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நெஞ்சார்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறது. அவரது மறைவால் வாடும் குடும் பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் தமுஎகச ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.