tamilnadu

img

கலைஞருக்கு மெரினாவில் நினைவகம்.... சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு...

சென்னை:
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் நினைவகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டம் செவ்வாயன்று (ஆக.24) காலை10 மணிக்கு கூடியதும், கலைஞரின் நினைவிடம் அமைத்தல் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவைவிதி 110-ன்கீழ் தனது முதலாவது அறிக்கையை வாசித்தார்.அப்போது, விதி 110-ன்கீழ் அறிவிக்கும் முதல் அறிவிப்பே தலைவர், முத்தமிழறிஞர், எண்பதாண்டு காலம் இந்தத் தமிழ்ச் சமுதாயத்துக்கு உழைத்த போராளி கலைஞர் புகழுக்குப் பெருமை சேர்க்கும் அறிவிப்பாக அமைந்துள்ளதை நினைத்து நான் மட்டுமல்ல, இந்த அரசே பெருமைப்படு கிறது”என்றார்.

“என் பாதை, சுயமரியாதைப் பாதை, தமிழின நலன் காக்கும் பாதை.தமிழ் நெறி காக்கும் பாதை, பெரியாரின் பாதை. அண்ணாவின் பாதை - அறவழிப் பாதை - அமைதிப் பாதை - ஜனநாயகப் பாதை - இதில் பயணித்தால் மரணமே வரும் எனப் பயமுறுத்தினாலும், அந்தப் பாதையி லிருந்து மாறமாட்டேன்” என்று இறுதிவரை உறுதியோடு வாழ்ந்தவர்தான் கலைஞர் என்றும் கூறினார்.80 ஆண்டு பொதுவாழ்க்கை, 70 ஆண்டுகள் திரைத்துறை, 70 ஆண்டுகள் பத்திரிகையாளர், 60 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினர், 50 ஆண்டுகள் திமுகவின் தலைவர் என்று வாழ்ந்த காலம் முழுவதும் வரலாறாகவாழ்ந்தவர் கலைஞர். நின்ற தேர்தலில் எல்லாம் வென்ற தலைவர் அவராக மட்டும்தான் இருக்க முடியும்.  13 முறை இந்தச் சட்டமன்றத்துக்குப் போட்டியிட்டு, 13 முறையும் வெற்றி வாகை சூடிய வெற்றி நாயகர் கலைஞர். தோல்வி அவரைத் தொட்டதே இல்லை! வெற்றி அவரைக் கைவிட்டதே இல்லை! அவர்தான் கலைஞர் எனவும் தெரிவித்தார்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு, வள்ளுவர் கோட்டம், குமரியில் 133 அடியில் சிலை, தெற்காசியாவிலேயே மிகப்பெரிய அண்ணா நூலகம்,  மாணவர்களுக்கு இலவசப் பேருந்து பயணச்சீட்டு என்று இன்று நாம் பார்க்கும் நவீனத் தமிழ்நாடு என்பது கலைஞர் உருவாக்கிய தமிழ்நாடு ஆகும். ‘சமுதாயச் சீர்திருத்தத் தொண்டு, வளர்ச்சிப்பணிகள், சமதர்ம நோக்கு’ இவை மூன்றையும்தான் தன்னுடைய ஆட்சியின் இலக்கணம் என்று சொன்ன முதலமைச்சர்தான் கலைஞர் எனவும் புகழாரம் சூட்டினார்.

திருக்குவளை என்ற குக்கிராமத்திலிருந்து கிளம்பிய ஒரு இளைஞனுக்குத் தமிழ்நாட்டை எப்படி வடிவமைக்க வேண்டும் என்ற கனவு இருந்தது; ஒரு தொலைநோக்குப் பார்வை இருந்தது. கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தின் நிரந்தரத் தலைப்புச் செய்தியாக இருந்த கலைஞர் ஆற்றிய அரும்பணிகளைப் போற்றும் விதமாக, அவரது வாழ்வின் சாதனைகளை, சிந்தனைகளை மக்களும், வருங்காலத் தலைமுறையும் அறியக்கூடிய வகையில், நவீன விளக்கப் படங்களுடன் சென்னை, காமராஜர் சாலை, அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 39 கோடிமதிப்பீட்டில் கலைஞருக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அறிவித்தார்.

;