tamilnadu

img

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு.... தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வரவேற்பு....

சென்னை:
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாடு சட்டப்பேரவையில் செப்டம்பர் 7 செவ்வாயன்று விதி 110ன் கீழ் முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்புக்களை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வரவேற்கிறது. அதே நேரத்தில் தேர்தல் அறிக்கையில் கூறியவாறு அரசு ஊழியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம், இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளையும் விரைந்து நிறைவேற்றுவதோடு, அகவிலைப்படி உயர்வை ஒன்றிய அரசு போல் 01.07.2021 முதல் வழங்க வேண்டும் எனவும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கேட்டுக்கொள்கிறது.

கடந்த 27.08.2021 அன்று தலைமைச் செயலகத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட4 சங்கங்களின் தலைவர்களுடன் தமிழ்நாடுஅரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் மனித வள மேலாண்மைத்துறைச் செயலாளர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பேச்சுவார்த்தையில் சங்கத் தலைவர்களால் முன்வைக்கப்பட்ட பல கோரிக்கைகளில் 13 அறிவிப்புக்களை 110 விதியின் கீழ் முத
லமைச்சர் அறிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தையின் போது வலியுறுத்திய கோரிக்கைகளான, அரசு ஊழியர்கள் தங்கள் பணிக்காலத்தில் பெற்றிடும் கூடுதல் கல்வித் தகுதிக்கான ஊக்க ஊதியம் விரைவில் வழங்கப்படும், அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும், ஓய்வு பெறும் நாளில் அரசு ஊழியர்களைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யும் நடைமுறை தவிர்க்கப்படும், 2016, 2017, 2019ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற போராட்டங்களில் ஈடுபட்ட அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தக் காலம், தற்காலிகப் பணிநீக்கக் காலம்ஆகியவை பணிக்காலமாக முறைப்படுத்தப் படும், வேலை நிறுத்தக்காலத்தின் போது மேற்கொள்ளப்பட்ட பணி மாறுதல்கள், ஒழுங்கு நடவடிக்கைகள் கைவிடப்படுவதோடு அதன் காரணமாக பாதிக்கப்பட்ட பதவி உயர்வுகள் சரிசெய்யப்படும் ஆகிய அறிவிப்புக்கள் வரவேற்கத்தக்கவை.

அதே போன்று பணிக்காலத்தில் காலமான அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் வாரிசுகளுக்கான கருணை அடிப்படை நியமனம் தொடர்பான நடைமுறைச் சிக்கல்கள் நீக்கப்படும், அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் வயது வரம்பினைக் கருத்தில் கொள்ளாமல் மகன்கள், மகள்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள், கொரோனா நோய்த் தொற்றுக்கு மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தில் கட்டணமில்லா சிகிச்சை வழங்கப்படும், கணக்கு மற்றும் கருவூலத்துறையின் IFHRMS பணிகள் எளிமைப்படுத்தப்படும், அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளதால், ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரத் தேவைக்கேற்ப ஆசிரியர் பணி நியமனம் மேற்கொள்ளப்படும் என்பன உள்ளிட்ட 13 அறிவிப்புக்களை வெளியிட்டதற்காக முதலமைச்சர்அவர்களுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.அதே நேரத்தில் அகவிலைப்படி உயர்வை ஒன்றிய அரசு போல் தமிழக அரசும் 01.07.2021முதல் வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்துகிறது. மேலும், அரசு ஊழியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி நிறைவேற்ற வேண்டும். இடைநிலை ஆசிரியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை மீண்டும் வழங்கிட வேண்டும். ஆசிரியர் நியமனத்திற்கான வயது வரம்பு 40 என்பதை ரத்து செய்திட வேண்டும்.

நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிவரும் 12500க்கும் மேற்பட்ட பகுதி நேர சிறப்பாசிரியர்களை முழுநேர ஆசிரியர்களாக்கி காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். காப்பீட்டுத் திட்டத்தில் தாய், தந்தை இருவரையும் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் பேச்சுவார்த்தையின்போது வலியுறுத்தப்பட்டன. அக்கோரிக்கைகளையும் முதலமைச்சர் நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்துகிறது. ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் மாண்புமிகு. முதலமைச்சர் அவர்கள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். அதற்கேற்ப அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை மாண்புமிகு.முதலமைச்சர் அவர்கள் நிறைவேற்றுவார் என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பெரிதும் எதிர்பார்க்கிறது.இவ்வாறு அவர்  கூறியுள்ளார். 

;