ஆட்டோவில் மதுபானங்கள் கடத்தியவர் கைது
விழுப்புரம், செப். 9- புதுச்சேரி மாநிலப் பகுதியில் இருந்து விழுப்புரத்திற்கு ஆட்டோவில் ரகசிய அறை அமைத்து, மதுபானங்களை கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்து ஆட்டோவை பறிமுதல் செய்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் புதுச்சேரி எல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் போதைப் பொருட்களை கட்டுப்படுத்தும் வகையில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அண்ணா நகர் அருகே வாகனத் தணிக்கையில் இருந்த போது அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது அதில் புதுச்சேரி மதுபானங்கள் இருந்ததை கண்டறிந்து ஆட்டோவை ஓட்டிவந்தவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் விழுப்புரம் ஜி. ஆர். பி தெருவை சேர்ந்த சபாபதி என்பதும் புதுச்சேரியில் இருந்து விற்பனைக்காக மதுபானங்கள் எடுத்து வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மதுபானங்களை கடத்தி வந்த ஆட்டோ மற்றும் 400 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.