செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்கவிழா அன்று 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடக்கிறது. அதன் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான நிதியையும் தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா வரும் 28 ஆம் தேதி நடைபெற உள்ளது.
அதில் 187 நாட்டின் 1,500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் தொடக்க விழாவில் கலந்து கொள்வர். தொடக்க விழா சென்னையில் நடப்பதால் 28 ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், அதனை முன்னிட்டு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு மட்டும் வருகிற 28 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
முன்னதாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் சென்னை முதல் மாமல்லபுரம் வரை இலவச பேருந்துகளை இயக்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.