சர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பியாட் சதுரங்க போட்டி ஜூலை 27 ஆம் தேதிமுதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதிவரை தமிழகத்தில் நடைபெறவுள்ளதாக தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
இதுகுறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதிவரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும். செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் 2,500 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த போட்டியில் 200 நாடுகளிலிருந்து 2000 வீரர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச அளவில் நடைபெறவுள்ள 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்று தெரிவித்தார். இந்த போட்டியில் கலந்துகொள்ளும் 75 இந்திய கிராண்ட் மாஸ்டர்களில் 25 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்,
2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். இந்த செஸ் ஒலிம்யாட் போட்டி, 1927 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை ஒருமுறை கூட இந்தியாவில் நடத்த வாய்ப்பு கிடைக்காத நிலையில், தற்போது 2022 ஆம் ஆண்டுக்கான செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடைபெற இருக்கிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஜார்ஜ்யாவில் நடந்த 43ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சீனா முதல் இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.