tamilnadu

img

காலத்தை வென்றவர்கள் : விடுதலைப் போராட்ட வீரர் ச. து. சுப்பிரமணிய யோகி பிறந்த நாள்...

சங்ககிரி துரைசாமி சுப்பிரமணிய யோகி நவம்பர் 30, 1904ல் பிறந்தார். இவர் தமிழறிஞர். சொல்வளமும், பொருட்செறிவும் நிறைந்த கவிதைகளை அளித்தவர்களில் ஒருவர். இந்திய விடுதலைப் போராட்ட வீரர், தமிழில் சிறு காப்பியங்கள் இயற்றியவர். 1930களில் திரைப்பட பாடலாசிரியர், பாடகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர், இயக்குனர். இவரது படைப்புகள் மணிக்கொடி, சுதேசமித்திரன் ஆகிய இதழ்களில் வந்திருக்கின்றன. நன்கு இலக்கியங்களை கற்ற இவரது வருகையால் தமிழ் திரைப்படங்களில் இலக்கியத் தமிழ் இடம் பெற்றது. இவரது படைப்புக்கள் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.

உதகமண்டலம் காவல்துறை அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, காந்தியடிகள் ஊட்டிய விடுதலை வேட்கை, யோகியாரை, அரசாங்க வேலையைத் தூக்கியெறியச் செய்து, விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட வைத்தது. சென்னையில் நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். பெரியார் நடத்திய வைக்கம் போராட்டத்திலும் கலந்து கொண்டார். 1932ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி ஈரோட்டில் நடந்த மறியல் போராட்டத்தில், தடையை மீறிக் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டு, ஓராண்டு காலம் சிறையில் அடைக்கப்பட்டார். பெரியார், ராஜாஜி ஆகியோருடன் சிறையில் இருந்துள்ளார் யோகியார்.

தனது சிறை அனுபவங்களை, “சிறைச்சாலை ஓர் தவச்சாலை; அது ஒரு “புன்மைக் கோட்டம்”; இழிவுக்குகை; ஆனால், அதுவே நமது சுதந்திர தேவியின் கோயில் வாயில்! அடிமைத்தனத்தின் குறுகிய சந்துகளில் சென்றால் தான், நாம் அழகிய அகண்ட விடுதலையின் ராஜபாட்டையில் நடக்க முடியும். ஆகவே, சிறைச்சாலையை நான் வணங்குகிறேன்; வாழ்த்துகிறேன்; போற்றுகிறேன்; சிறைகள் நீடு வாழ்க!” என, “எனது சிறைவாசம்” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

===பெரணமல்லூர் சேகரன்===

;