பட்டா பெயர் மாற்ற ரூ. 37 ஆயிரம் லஞ்சம் பெற்ற நில அளவையர் கைது
ராணிப்பேட்டை, செப்.23 - வாலாஜா பகுதியில் பட்டா பெயர் மாற்றத்திற்கு ஓய்வு பெற்ற ராணுவ வீரரிடம் ரூ. 37 ஆயிரம் லஞ்சம் பெற்ற நில அளவையர் சித்ராவை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வாலாஜா வட்டம், துரைக்கண்ணு நகரில் வசிக்கும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கார்த்திகேயன் (53) இவர் தனது மாமனார் பெயரில் உள்ள பூர்வீக சொத்துக் களை தனது மனைவி மற்றும் அவரது தங்கைகள் பெயரில், பாகப்பிரிவினை மாற்றி தனிப்பட்டா பெற முடிவு செய்தார். இதற்கு, தேவையான ஆவணங்களை கொண்டு புதுப்பட்டா பெறுவதற்கு வாலாஜா வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். வாலாஜா வட்டாட்சியர் அலுவலகத்தில் சர்வே பிரிவில் பணிபுரியும் நில அளவையர் சித்ரா (35), பட்டா பெயர் மாற்றம் செய்து வழங்குவதற்காக ரூ. 40 ஆயிரம் லஞ்சம் கேட்டு, இறுதியாக ரூ. 37 ஆயிரத்திற்கு ஒப்புக்கொண்டார். இது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் கணேசனிடம் புகார் அளித்துள்ளார் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கார்த்திகேயன். புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் விஜய லட்சுமி தலைமையில் காவல்துறை வழி காட்டுதல் படி ரசாயனம் தடவிய பணத்தை புகார்தாரர் கார்த்திகேயன் அளிக்க அதை நில அளவையர் சித்ரா பெற்றுள்ளார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் சித்ராவை கையும், களவுமாக பிடித்தனர். நீதிபதியின் உத்தரவின் பேரில் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.