கடலூர் அருகே தரைப்பாலம் துண்டிப்பு: 20 கிராம மக்கள் தவிப்பு
விருத்தாசலம்,ஆக.11- பெண்ணாடம் அருகே வெள்ளாற்றில் இரண்டு மாவட்டங் களை இணைக்கும் தரைப்பாலம் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் 20 கிராமங்கள் துண்டிக்கப் பட்டுள்ளன. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த பெண்ணாடம் அருகே உள்ள சவுந்தர சோழபுரம் கிராமத்தில் உள்ள வெள்ளாற்றில் கடலூர் - அரியலூர் மாவட்டத்தை இணைக்கும் வகையில் ரூ.12 கோடியே 60 லட்சம் செலவில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சவுந்தர சோழபுரத்தில் இருந்து வெள்ளாற் றின் அக்கரையில் உள்ள அரியலூர் மாவட்டம், கோட்டைக் காடு வரை இணைப்பு சாலையாக தற்காலிக மண் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் வெள்ளாற்றை கடந்து இரண்டு மாவட்டங்களையும் சேர்ந்த பொதுமக்கள் போக்குவரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக கள்ளக்குறிச்சி-திருச்சி மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக வயல்வெளி பகுதியில் உள்ள மழைநீர் வெள்ளாற்றில் வெள்ளப் பெருக்காக வந்து கொண்டிருக்கிறது. இதில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த சவுந்தரசோழபுரம்-கோட்டைக்காடு தரைப்பாலம் ஞாயிறன்று அடித்து செல்லப் பட்டது. இதனால் அந்த வழியாக போக்குவரத்தை பயன் படுத்தும் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டு, அங்கு வசிக்கும் மக்கள் 15 கிலோமீட்டர் தொலைவு சுற்றி வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மேம்பாலம் அமைக்கும் பணி 70 விழுக்காடு முடிந்த நிலையில் தற்போது கட்டுமான பணிகள் நிறுத்தி வைக்கப்பட் டுள்ள காரணத்தால் மேம்பால பணியும் நிறைவடையாமல், தற்காலிக பாலம் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.