சென்னை:
மாற்றுத் திறனாளிகளை அவமானப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்த திரைக் கலைஞர்களின் வருத்தம் ஏற்கத் தக்கதல்ல என்றும் அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாற்றுத்திறனாளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பாஜக-வில் இணைந்தபின் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு,” சிந்திக்கக் கூடிய மூளை வளர்ச்சி குன்றிய கட்சி காங்கிரஸ்”என்று கடுமையாக விமர்சித்தார்.மாற்றுத்திறனாளிகளை அவமானப்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்த நடிகை குஷ்புவுக்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் நல உரிமை சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே காவல் நிலையங்களில் புகார் செய்யப்பட்டது.இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை மூளை வளர்ச்சி குன்றிய கட்சி என்று அழைத்தது குறித்து குஷ்பு வருத்தம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “அவசரம், ஆழ்ந்த துயரம், வேதனையில் இரண்டு சொற்றொடர் களை தவறாகப் பயன்படுத்தியதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.
கடந்த காலங்களில் பல தலைவர்களும் இதேபோன்ற கவனக்குறைவான செயல்களை செய்திருக்கிறார்கள் என்பதையும், பலருக்கு எனது கவனக் குறைவான கருத்து மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கும் என்பதையும் நான் உணர்கிறேன்” என்று கூறியுள்ளார்.
எஸ்.நம்புராஜன்
இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் நல உரிமை சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மாற்றுத்திறனாளி உரிமை அமைப்புகளின் அழுத்தங்களின் காரணமாகவே திரைக் கலைஞர் குஷ்பூ மன்னிப்பு கோரியிருக்கிறார்” என்றார்.மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம் அமலில் உள்ள போதும் பிரதமர் நரேந்திர மோடி முதல் எச்.ராஜா, குஷ்பு உள்ளிட்ட பாஜக பிரபலங்களும், வேறு சில கட்சி தலைவர்கள் தொடர்ந்து இவ்வாறு பேசி வருவது கவனத்திற்குரியது என்றும் அவர் கூறினார்.ஆதங்கத்தின் காரணமாகவே சில வாசகங்கள் தவறாக சொல்லி விட்டதாக கூறியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
மாற்றுத்திறனாளிகளை சிறுமைப் படுத்தும் விதத்தில் பேசும் மனப்போக்கை அவர் மாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது என்றும் இதற்கு முன்னதாக மேலும் ஒரு சில தலைவர்களும் இவ்வாறு பேசி உள்ளதாக கூறி அதிலிருந்து குஷ்பூ ஆதாயம் தேட முயற்சிக்கிறார். தனது மன்னிப்பு அறிக்கையில்மனநலம் மற்றும் மன வளர்ச்சி பாதிப்பு ஆகிய இரண்டையும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி அறிக்கை வெளி
யிட்டுள்ளது அபத்தமானது என்றும் இரு பாதிப்புகளும் வெவ்வேறானவை என்பது கூட அவருக்கு தெரியவில்லை அவர் சுட்டிக்காட்டினார்.
மாற்றுத்திறனாளிகள் குறித்து அவர் மேலும் கற்க வேண்டி இருக்கிறது என்பதைத் தான் இது காட்டுகிறது. எனவே அவர் பொதுவாக மன்னிப்பு கோருவதை ஏற்க இயலாது.எதிர்காலத்தில் மாற்றுத்திறனாளிகளை அவதூறு செய்யும் இப்படிப்பட்டபேச்சுக்கள் பிரபலங்களிடம் இருந்து வரக்கூடாது என்பதற்காகவே இந்த மன்னிப்பை நாங்கள் ஏற்கவில்லை. அதனால் சட்டம் சட்டம் தன் கடமையைச் செய்யட்டும். வழக்குகள் நடக்கட்டும். நீதிமன்றத்தில் அவர் பதில் சொல்லட்டும் என்றும் நம்புராஜன் கூறினார்.