tamilnadu

img

கலாஷேத்ரா விவகாரம் - சட்டப்பேரவையில் முதல்வர் பதில்

கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்த நிலையில், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கலாஷேத்ராவில், பேராசிரியர் ஒருவர் நீண்ட நாட்களாக பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக அந்நிர்வாகத்திடம் மாணவிகள் புகார் அளித்தனர். ஆனால், நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருந்ததால், சமூக வலைத்தளங்களில் மாணவிகள் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தனர். இதையடுத்து நேற்று மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் காவல்துறை தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவர் ஏ.கே.குமரி, இன்று கலாஷேத்ரா கல்லூரியில் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.
இவ்விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று சிறப்பு கவன தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்குப் பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கலாஷேத்ராவில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்; மாணவிகளுக்குத் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
 

;