சென்னை:
சென்னை தமிழக அரசால் பொருளாதார மேம்பாட்டுக்கான ஆய்வு செய்து ஆலோசனை வழங்கிட அமைக்கப்பட்ட ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர்சி.ரங்கராஜன் குழு பரிந்துரையின் அடிப்படையில் பேரூராட்சி உள்ளிட்ட நகர்ப்புறங்களில் உடனடியாக வேலைஉறுதித்திட்டத்தை துவங்கிட வேண்டுமென வலியுறுத்தி செவ்வாயன்று (அக்டோபர் 06) தமிழகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட பேரூராட்சிகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் பேரெழுச்சியுடன் நடைபெற்றுள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் பேரூராட்சி அமைப்பு முறை உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 528 பேரூராட்சிகளில் ஏறக்குறைய 50 பேரூராட்சிகள் நீங்கலாக பிற பேரூராட்சிகள் அனைத்தும் முழுக்க முழுக்க கிராமங்களாக உள்ளன. இந்த பகுதியில் விவசாயம் மற்றும் அதன் சார்பு தொழில்களில் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு - குறு விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் நிரம்பி உள்ளனர். அரசின் கொள்கைகளால் சில ஆண்டுகளாக அனைத்து துறைகளிலும் தொழில் நசிவு ஏற்பட்டுள்ளதால் பேரூராட்சிப் பகுதிகளில் வாழும் மக்கள் வேலையுமின்றி - வாழ்க்கை நடத்திட போதிய வருமானமுமின்றி வாடுகின்றனர்.
பேரூராட்சிப் பகுதிக்கும் வேலைவாய்ப்புத்திட்டம் துவங்கிடக் கோரி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து பல கட்டப் போராட்டங் களை நடத்தி வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாடு முதலமைச்சர்,துணை முதலமைச்சர்; வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்களையும், துறை அதிகாரிகளையும் பல முறை நேரில் சந்தித்து, சங்கத்தின் மாநிலக்குழு சார்பிலும் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தமக்களின் உணர்வுகளை மதிக்காதஆட்சியாளர்கள் எவ்வித நடவடிக்கை களையும் மேற்கொள்ளாமல் காலம் கடத்தி வருகின்றனர்.இந்நிலையில், மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சி இணைச் செயலாளர் சஞ்சய்குமார் கடந்த மாதம் வெளியிட்டுள்ள ஊடகச் செய்தியில், ஊரகவேலைத்திட்டத்தை சிறுநகர்ப்புறங் களுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவித்துள்ளார். தமிழக அரசால் அமைக்கப்பட்ட சி.ரங்கராஜன் குழுவும் இந்த காலங்களில் நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தைத் துவங்கிட வேண்டுமென அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.ஆகவே, மத்திய - மாநில அரசுகள் காலம் கடத்துவதைத் தவிர்த்து, உடன்வேலைவாய்ப்புத் திட்டத்தை துவங்கிபேரூராட்சி மக்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டும்; கொரோனா கால நிவாரணமாக, ஏழைக்குடும் பங்களுக்கு மாதத்திற்கு ரூ.7500, ஓய்வூதியம் ரூ.3000 வழங்கிட வேண்டும்;பொது விநியோகத் திட்டத்தில் தொடர்ந்து அனைத்து சமையல் பொருள்களையும் இலவசமாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 6 அன்று தமிழ்நாடு முழுவதும் 203 பேரூராட்சி அலுவலகங்களில் மனு அளித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் மாநிலத் தலைவர் ஏ.லாசர், சேலம்மாவட்டம் காடையாம்பட்டி பேரூராட்சியில் மாநிலப் பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் பொருளாளர் எஸ்.சங்கர் மற்றும் மாநிலச் செயலாளர்கள் எம்.சின்னதுரை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டையிலும், அ.பழநிசாமி திருச்சி மாவட்டம் கூத்தப்பாரிலும், மாநில துணைத் தலைவர் சி.துரைசாமி நாமக்கல் மாவட்டம் பல்லாக்காபாளையத்திலும், பி.வசந்தாமணி திண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடியிலும் கலந்து கொண்டனர்.வேலை கேட்டு எழுச்சியுடன் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாநிலம் முழுவதும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். -1 லட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் வேலை கேட்டு அளிக்கப்பட்டன.