tamilnadu

ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதித்தது சட்டவிரோதம் மத்திய-மாநில அரசுகளுக்கு விவசாயிகள் சங்கம் கடிதம்

சென்னை, மே 21-தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து வகையான பெட்ரோலிய ரசாயனப் பொருட்கள் எடுக்க மத்திய அரசு ஏலம் விடுவது, ஆய்வுக்கு அனுமதி வழங்குவதை திரும்பப் பெறக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மத்திய பெட்ரோலியத்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தின் நகல் பிரதமர், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர், தமிழக முதன்மைச் செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அந்த கடிதத்தின் விவரம் வருமாறு:-திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் நிலக்கரி படுகையில் மீத்தேன் எடுக்க கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் என்ற நிறுவனத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டதை எதிர்த்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளும் போராட்டங் களை நடத்தின. இதன் விளைவாக இத்திட்டம் செயல்படுத்தப் படுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு நிபுணர்குழு ஒன்றை அமைத்தது. நிபுணர்குழு ஆய்வு செய்து அளித்த அறிக்கை மற்றும் பரிந்துரைகளின் அடிப் படையில் காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்க தடைவிதித்து 8.10.2015 ஆம் தேதியிட்ட அரசாணை எண்-186 ல் வெளியிட்டது. இந்த தடை உத்தரவு தற்போதும் உள்ளது. இந்த நிலையில் கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட அனைத்து வகையான பெட்ரோலிய ரசாயனப் பொருட்களை எடுப்பதற்கும், அது தொடர்பான ஆய்வினை மேற்கொள்ளவும் வேதாந்தா மற்றும் ஓஎன்ஜிஓ நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவிரி டெல்டா என்பது ஆண்டு தோறும் பல லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யும் பகுதியாகும். பல கோடிக் கணக்கான விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக வேளாண் மையே விளங்குகிறது. மத்திய அரசு பெட்ரோலிய ரசாயன மண்டல மாக அறிவித்துள்ளது இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் பறித்துவிடும் ஆபத்து உள்ளது. அத்துடன், நிலத்தடி நீர்வளம் பாதிக்கப்படுவது, சுற்றுச்சூழல் பாதிப்பு, நிலவளம் விவசாயத்திற்கு லாயக் கற்றதாக மாறும் என்பதும் உட்பட பலவிதமான பாதிப்புகள் ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தமிழக அரசு, அரசாணையின் மூலம் தடை விதித்துள்ள நிலையில் அதை கணக்கிலே எடுத்துக் கொள்ளாமல் மத்திய அரசு செயல்படுவது சட்டவிரோதமாகும். சுற்றுசூழலில் ஏற்படுத்தும் தாக்கம், சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம், மக்களின் கருத்துக்களை கேட்பது போன்ற எவ்வித அடிப்படையான சட்டப்படி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் எதையும் மேற் கொள்ளாமல் அடாவடித்தனமாக மத்திய அரசு செயல்படுகிறது என்பதை சுட்டிக்காட்டுகிறோம். எனவே, தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதியில் பெட் ரோலிய ரசாயன பொருட்கள் எடுப்பது தொடர்பான அனைத்து பணிகளையும் உடனடியாக நிறுத்தி வைக்க உத்தரவிடுமாறு தங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம். கிணறுகளை தோண்டுவதற்கான இடங்களை அடையாளம் காண்பது, அளவிடுவது, ஆய்வுப்பணிகளை மேற்கொள் வது ஆகிய அனைத்தும் மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படும் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக் கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து மண்ணையும் - மக்களையும் பாதுகாக்க முன் வருமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம். அதற்கு முதற் படியாக வேதாந்தா நிறுவனம் மற்றும் ஓஎன்ஜிஓ நிறுவனத் திற்கு பெட்ரோலிய ரசாயன பொருட்கள் எடுக்க கொடுத் துள்ள அனைத்து மட்டத்திலான அனுமதிகளையும் ரத்து செய்ய வேண்டுமெனக் கோருகிறோம். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

;