tamilnadu

img

மதராஸ் நகரில் வீட்டு வரி, குப்பைவரி, கொளுத்தும் விளக்கு வரி. . .

    மதராஸ் நகரில்  வீட்டு வரி, குப்பைவரி, கொளுத்தும்  விளக்கு வரி. . .

- ராமச்சந்திர வைத்யநாத் - 17ம் நூற்றாண்டின் துவக்கத்தி லேயே பிரிட்டனில் இயற்றப்பட்ட சட்டத் திற்கிணங்க 1688ல் சென்னப்பட்டணத் தில் மதராஸ் நகராட்சி  உருவாகி விட்டது.  அன்றைய தினம் அது கோட்டையிலிருந்தே செயல்பட்டு  வந்திருக்கிறது.  கோட்டையைச் சுற்றி யுள்ள பகுதிகளின் நிர்வாகத்தையும் மேம்பாட்டையும் அது மேற்கொண்டு வந்திருக்கிறது.  இதற்காக இயற்றப் பட்ட விதிகள் யாவுமே பிரிட்டனின் நகர நிர்வாக அமைப்பை மாதிரியாகக் கொண்டிருந்தன. ஆயின் அதற்கு முன்னரே கிழக்கிந்திய கம்பெனியினர்  1678ல் பட்டணத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளும் பொருட்டு ஒவ்வொரு வீட்டிற்கும் வரி விதித்த தோடு,  அவற்றை வசூல் செய்யும் பொருட்டு ஒருவரையும் நியமித்தி ருக்கின்றனர்.  இது தவிர குப்பைகளை யும், மலத்தையும் அள்ளும் வகையில் கூலிகளும் நியமிக்கப்பட்டிருக்கின்ற னர்.  ஒவ்வொரு வீட்டிற்கும் அரை பணம் முதல் ஒரு பணம் வரை வரி வசூலிக் கப்பட்டிருக்கிறது.   1693ல்தான் வீட்டு வரி மட்டுமின்றி  இதர  வரிகளையும் முறைப்படுத்தும் நடவடிக்கைகள் துவங்கியிருக்கின் றன.  அந்த ஆண்டில்தான் வீதிகள் சீர மைக்கப்பட்டன.  செங்கல் பதிக்கப்பட்ட நடைபாதைகளும், மண்ணடித்த தெருக்களும் உருவாயின.  1800களின் மத்தியில் நகராட்சி ஆணையர் அலு வலகம் எர்ரபாலு செட்டித் தெருவிலும், சுகாதார ஆணையர் அலுவலகம் தேனாம்பேட்டையிலும், தடுப்பூசி அலு வலகம் புரசைவாக்கம் நெடுஞ்சாலை யிலும் செயல்பட்டு வந்திருக்கிறது. இவையன்றி சொத்து வரி மதிப்பீட்டு அலுவலகம் எண் 116 ஆர்மீனியன் தெரு  என்ற முகவரியில் செயல்பட்டு வந்திரு க்கிறது.     இத்தகைய பணிகள் அனைத் தையும் ஒன்றிணைக்கக்கூடிய மத்திய அலுவலகம் அதுவரை உருவாக வில்லை. பின்னாளில் எர்ரபாலுசெட்டி தெருவில் இருந்த ஆணையர் அலுவல கம் நகராட்சி  அலுவலகமாக மாற்ற மடைந்தது.   அடுத்த கட்டத்தில் 1913ம் ஆண்டு நவம்பர் 29 அன்றுதான்   பின்னாளில் ரிப்பன் கட்டிடம் என்று அறியப்படக் கூடிய புதிய நகராட்சி  அலுவலகம் செயல்பாட்டிற்கு வந்தது.  நகராட்சி  செயல்படத் துவங்கி கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளுக்குப்  பின்னரே நிர்வாகத்தை எளிதாக்கும் வகையில் வார்டுகளை பிரிக்கும் முறை உருவாகியிருக்கிறது,  அதற்கு முன்னர் காவல் துறை, ஐந்து  லட்சம் பேரைக் கொண்ட பட்டணத்தை நிர்வகிக்கும் வகையில் ஏழு டிவிஷன்களாக வகைப்படுத்தியிருந்தது.  ஒவ்வொரு டிவிஷனுக்கும் ஜமேதார் ஒருவர் நிர்வாகியாக இருந்திருக்கிறார்.  இன்னும் சொல்லப்போனால் நகர நிர்வாகத்தின் சகல அம்சங்களையும் நிர்ணயிப்பவர்களாக  காவல்துறை தான் இருந்திருக்கிறது.    இந்த நிலை 1860கள் வரை நீடித் திருந்தது என்று சொல்லலாம்.  பின்னரே வார்டுகள் முறை உருவானது.  1867ல் எட்டு வார்டுகளையும், 1919ல் 30 வார்டுகளையும், 1936ல் நாற்பது வார்டு களையும், 1947ல் 50 வார்டுகளையும், 1959ல் நூறு வார்டுகளையும் மதராஸ் நகராட்சி  நிர்வகித்து வந்திருக்கிறது.  அனைருக்கும்   வாக்குரிமை கிடையாது  துவக்க கட்டத்தில் வார்டுகளி லிருந்து தேர்வு செய்யப்படுவோர் ஆணையர்கள் என்றே அழைக்கப் பட்டு வந்திருக்கின்றனர்.  நகரில் உள்ள அனைவருக்கும் வாக்குரிமை கிடை யாது.  சொத்து பத்து உள்ளவர்கள், வரி கட்டுவோர் இப்படி பல நியதிகள் இருந்து வந்திருக்கின்றன.  தேர்தலில் நிற்பவர்களுக்கும் இத்தகைய நியதிகள் இருந்து வந்திருக்கின்றன.  ஆணாக, 25வயதுக்கு மேற்பட்ட வராக, ஆங்கிலம் அறிந்தவராக இருக்க வேண்டும் என்ற வரைமுறை முக்கியத்துவம் வாய்ந்தது.  குறிப்பாக 1917ல் மதராஸ் பட்டணத்தின் மக்கள் தொகை என்பது கிட்டத்தட்ட ஐந்து லட்சம் என்ற அளவில்தான் இருந்திருக்கிறது.  ஆயின் அன்றைய தினம் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளோர் எண்ணிக்கை என்பது 600 பேர் மட்மே. தேர்வு செய்யப்பட வேண்டிய கமிஷனர்களின் எண்ணிக் கையோ 20.  மேலும் வெற்றி பெறுவ தற்கு குறைந்த பட்சம் 20 வாக்கு களையாவது பெற்றிருக்க வேண்டும் என்ற விதியும் இருந்து வந்திருக்கிறது.  இரண்டு வேட்பாளர்கள் சமஅளவில் வாக்குகளைப் பெற்றிருந்தால் யார் முனிசிபாலிடிக்கு அதிக வரி கட்டியிருக் கிறார்களோ அவர்களே தேர்வு செய்யப் பட்டிருக்கிறார்கள்.  இப்படித்தான் குடவோலைக்கு   நெருக்கமான தேர்தல் முறை நகரத்தில் இருந்து வந்திருப் பதற்கு நகரத்தில் இருந்து கிட்டத் தட்ட அறுபது மைல்களுக்குள்  உத்திர மேரூர் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.  பிழைக்க வந்தோர் மீது வரி  சமீப காலங்களில் சென்னை பெரு நகர மாநகராட்சி விதித்து வரக்கூடிய வரிகள் பற்றி சர்ச்சைகள் இருந்து வரு கின்றன.  சொத்து வரி, தொழில் வரி, நிறு வன வரி போன்றவை சாதாரண மக்க ளைத்தான் குறி வைக்கிறது என்ற குற்றச்சாட்டு பொதுவாக இருந்து வருகிறது.  கெட்டும் பட்டணம் சேர் என்ப தற்கிணங்க பிழைக்க வந்தோர் மீது தொழில் வரி விதிக்கப்படும்  விசித்திரம் இங்கே இருந்து வருகிறது.  நிர்வாகமுறை உருவானவுட னேயே 1800களிலேயே பல்வகை வரி விதிப்புகளை நகராட்சி  கொண்டிருந்தி ருக்கிறது.  ஏற்கெனவே  1678ல் அமல்படுத் தப்பட்ட  ஸ்காவென்ஜர் செஸ் தவிர 1793ல் நகராட்சி  வரி முறை சட்ட ரீதி யாக அமல் செய்யப்பட்டது.  பின்னா ளில் நகரத்தை  பராமரிக்கும் விதமாக 1855ல் இயற்றப்பட்ட சட்டத்திற்கிணங்க அன்றைய தினம் காவல் துறை சார்ந்த ஆய்வாளர்  ஒருவரின் மேற்பாற் வையில் ஒவ்வொரு காவல் டிவிஷன் களிலும் இவற்றை அமல்படுத்தியுள் ளனர்.  தெருவில் குப்பை கொட்டினாலும் கழிவுநீரை தெருவில் ஓடவிட்டாலும் பத்து ரூபாயும், சாலையையோ சாக்க டையையோ  வடிகாலையோ ஆக்ரமித் தால் நூறு ரூபாயும், கமிஷனர்களின் ஒப்புதலின்றி புதிய தெருக்களை அமைத்திட்டால்  ஐநூறு ரூபாயும், தெருப்பெயர்  பலகையை பிடுங்கிப் போட்டாலோ அல்லது சேதம் விளை வித்தாலோ மட்டுமின்றி, வீட்டின் எண்ணை அழித்தாலும்  அல்லது  சேதம் விளைவித்தாலும்  இருபது ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.  கூரையிலிருந்து மழைநீர் வீதியில் நடமாடும் நபர் மீது கொட்டினாலும்,    வீடு இடிக்கப்படுகையில் அல்லது பழுது பார்க்கையில் தெருவில் அறி விப்பு பலகையும் தடுப்பும் வைக்கப்படாது இருந்தால் அதற்கும் அச்செயல்பாடுகள்  தொடரக்கூடிய ஒவ்வொரு நாளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வந்திருக்கிறது,   குளம், குடிநீர்கால்வாய் போன்ற வற்றை அசுத்தம் செய்வோருக்கு அல்லது கழிவுநீரை கலக்கச் செய்வோ ருக்கு அதிக அபராதம் விதிக்கப்பட்டி ருக்கிறது.  அனுமதியற்ற  இறைச்சிக் கூடங்களுக்கு மட்டுமின்றி, சுகாதார மற்ற உணவுப் பொருட்கள் விற்பனைக் கும், கட்டுமானக் கழிவுகளை தெரு வில் கொட்டுவதற்கும் அபராதம் விதிக் கப்பட்டு வந்திருக்கிறது  வீடு காலியாக இருந்தாலும் வரி  தெருவிளக்குகள், தெருவில் நீர்  தெளித்தல், தெருக்களை பராமரித் தல், பழுது பார்த்தல், சாக்கடைகளை முறைப்படுத்துதல் போன்றவற்றுக் காக பட்டணத்தில் உள்ள வீடுகளுக்கு மட்டுமின்றி கட்டுமானங்கள் காலி மனைகள் ஆகியவற்றின் மதிப்பில் ஐந்து விழுக்காடு சொத்து வரி யினை ஆண்டுதோறும் முன்னதாக செலுத்த வேண்டும். வீடு காலியாக இருக்கிறது என்பதனால் வரித் தள்ளுபடி கோருவதும் அனுமதிக்கப் படவில்லை.  இன்னும் சொல்லப் போனால்  அன்றைய தினம் சொத்து வரி கண்டிப்பாக அமல்படுத்ததப்பட்டு வந்திருக்கிறது.  இன்றைய தினத் தோடு ஒப்பிடுகையில் அது சற்று கூடு தலாகவே விதிக்கப்பட்டு வந்தி ருக்கிறது.  கழுதை, எருமை, குதிரைக்கு வரி  மின்சாரம், கேஸ், நீராவி போன்ற வற்றால் இயங்கக்கூடிய இயந்திர வண்டிகளுக்கு மட்டுமின்றி மாடு, குதிரை பூட்டிய நான்கு சக்கர இரு சக்கர வண்டிகளுக்கும் அரையாண்டு வரியை முனிசிபாலிடி விதித்து வந்திருக்கிறது.  வண்டிகளுக்கு மட்டு மின்றி மற்ற உபயோகங்களுக்காக  பயன்படுத்தி வரக்கூடிய  எருது, குதிரை, எருமைக்கடா,  கழுதை, நாய் போன்ற வற்றையும் விடவில்லை. இரு சக்க ரத்துடன் ஒற்றை மாடோ குதிரையோ அல்லது இரட்டை மாடோ அல்லது குதிரையோ இழுக்கக்கூடிய சுருள் வில் பூட்டிய வண்டிக்கு   நாலரை ரூபாயும், சைக்கிளுக்கு இரண்டு ரூபாயும்,  கழுதைக்கு ஆரணாவும், நாய்க்கு பன்னிரெண்டு அணாவும் அரையாண்டு வரி விதித்துள்ளனர்.   சுங்க வரி விதிப்பும் சென்னப்பட்ட ணத்தின் எல்லைகளில் இருந்திருக்கி றது. நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்ட நிறுவனங்கள் மீதான வரியும் இருந்தது.    தொடரும்  வரிவிதிப்பு  மொத்தத்தில் மதராஸ் நகராட்சி கோட்டையிலிருந்து செயல்படத் துவங்கிய நாள்தொட்டே மக்கள் மீதான வரிவிதிப்பை துவக்கிவிட்டது என்றே சொல்லலாம்.  பிரத்யேக நிர்வாக சபை உருவாகி வருவாய்க் கூறுகள் அதிகரித்த போதிலும் அடித்தட்டு மக்கள் மீதான வரி விதிப்பு நடைமுறை என்பது அச்சுப் பிசகாமல் தொடர்ந்து வருகிறது.  பட்டணம் பெருநகரான பின்னர் உள்ளேயிருந்த சுங்கச் சாவடிகள் அகற்றப்பட்டதால்  அந்தத் தீர்வைகள் நடைமுறையில் இல்லை.  அதற்கு பதிலாக நகரைச் சுற்றி வேறு விதமான சுங்கச் சாவடிகள் இந்நூற்றாண்டின் துவக்கத்தில் முளைத்தன.   இதில் முக்கியத்துவம் வாய்ந்த மற்றொன்று தூய்மைப்பணி ஊழியர்களின் நிலை பற்றியது.  ஏற்கெனவே 1900ன் துவக்கத்தில் முனிசிபாலிடி அறிக்கைகளிலும், ஆண்டுப் புத்தகங்களிலும் மதராஸ் ஹவுஸ் கன்சர்வேன்சி ஏஜெண்ட் பி.கிருஷ்ணஸ்வாமி ராஜு அண்ட் சன்ஸ், கோமளீஸ்வரன் பேட்டை என்று குறிப்பிடப்படுவதிலிருந்து  ஏற்கனவே ஒப்பந்த முறையையும் நகராட்சி  முயற்சித்ததை அறியலாம்.  இது  தோல்வியுற்று பின்னாளில் கைவிடப்பட்டதைத்தான் இன்றைய தினம் சென்னை மாநகராட்சி அமலாக்க முயற்சித்து வருகிறது.  நகராட்சி  வரிவிதிப்பு என்பது பட்டணத்தில் உள்ள மேட்டுக்குடிகள், உயர்வருவாய் பிரிவினர் ஆகியோர் மட்டுமின்றி, சாதாரண அடித்தட்டு மக்களையும்  ஒரே நிலையில் கொண்டுள்ளது.  விகிதாச்சார அடிப்படையில் வேறுபாடு இருப்பினும் வரி என்பது பட்டணத்து எல்லைக்குள் கால்வைத்த எவரையுமே முனிசிபாலிடி விடவில்லை என்பதைத்தான் இத்தனை விதமான வரிவிதிப்பும் உணர்த்துக்கிறது.  சாதாரண மக்கள் மீதான வரித்தாக்குதலை முனிசிபாலிட்டி தொடுத்திட்டதை 1896லேயே தனது கலியுக சிந்துவில் சிறுமணவூர் முனியசாமி முதலியார் பதிவு செய்திருக்கிறார்.  வரியெல்லாம்தலைக்குமேல் வாரண்டாய் திரியுது வீட்டுவரி வந்து வாசக்கால் தூக்குது வேபாரவரி வந்து சாமானை வளைக்குது குப்பைவரி வந்து குடிசையைப் பிடுங்குது கொளுத்தும்விளக்குவரி கழுத்தைப் பிடிக்குது மதராஸ் நகராட்சியின் வரிக்கொடுமையாக இதை அவர் சித்தரிக்காது கலிகாலக் கொடுமையின் கோலமாய் சித்தரித்தாலும் இன்றைக்கும்  பொருந்தும் வகையில்  மதராஸ்  நகராட்சியின் வரிவிதிப்பு பற்றிய அழுத்தமான  பதிவாக அது அமைந்துள்ளது.