மதுராந்தகம், ஜூன் 2 - கொரானா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில் ஹோமியோபதி மருந்தான ஆர்சானிக் ஆல்பம் 30 என்ற நோய் எதிர்ப்புச் சக்தி மருந்தை பயன்படுத்த மத்திய மாநில அரசுகள் பரிந்துரை செய்துள்ளன. இதனையடுத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் அரசு ஊழியர் சங்கம் இணைந்து ஹோமியோபதி சிறப்பு மருத்துவ முகாமினை நடத்தி ஆர்சானிக் ஆல்பம் 30 மருந்தை வழங்கி வருகின்றன. இதன்தொடர்ச்சியாக, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டத்திற்குட்பட்ட வேடந்தாங்கல், விநாயக நல்லூர், வள்ளுவப்பாக்கம், செங்கல்பட்டு வட்டம், திருமணி ஆகிய 5 கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு ஆர்சானிக் ஆல்பம் 30 என்ற மருந்து வழங்கப்பட்டது.
இம்முகாமில் சிறப்பு விருந்தினர்களாகத் திரைக்கலைஞர்கள் அருள்தாஸ், காளி வெங்கட், பூராமு ஆகியோர் கலந்து கொண்டு கிராம மக்களுக்கு மருந்துகளை வழங்கினர். மருத்துவர்கள் அ.பாலகுமார், வி.எ.ஜவகர், வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் மபா.நந்தன், மாவட்டச் செயலாளர் க.புருசோத்தமன், மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தமிழ்பாரதி, மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மருத்துவர் வா.பிரமிளா, அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ஸ்ரீராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.