tamilnadu

img

விளைநிலங்களில் உயர்மின்கோபுரம்.... மின்துறை அமைச்சருடன் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் நேரில் சந்திப்பு....

சென்னை:
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம்  வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் உயரழுத்த மின்கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கத்தின்சார்பில் பிப்ரவரி 11,12 ஆகிய இரண்டு நாட்கள் சட்டமன்ற முற்றுகை போராட்டம் பொதுச்செயலாளர்  பெ.சண்முகம் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் பவர்கிரீட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் சார்பில் உயரழுத்த மின்கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விவசாய விளை நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதால் நிலத்தின் மதிப்பு வெகுவாக குறைந்து விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இத்திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பிப்ரவரி 12 வெள்ளிக்கிழமையன்று மாநில மின்துறை அமைச்சர் தங்கமணி அவர்களுடன் விவசாயப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.விவசாயிகளின் சார்பில் பெ.சண்முகம்  தலைமையில் பி.டில்லிபாபு, ஈரோடு முனுசாமி, நாமக்கல் பெருமாள், திருவண்ணாமலை பலராமன், சேலம் ராஜேந்திரன், சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.பேச்சுவார்த்தையில், அனைத்து வகையான பாதிப்புகளுக்கும் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் பணத்தை செலுத்திய பிறகுதான் உயர்மின் கோபுர பணிகளை செய்ய வேண்டும். இதுவரை இழப்பீடு தீர்மானிக்கப்படாத கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள், கட்டிடங்கள் ஆகியவற்றிற்கு இழப்பீடு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சர் ஏற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்துவதாக தெரிவித்தார்.

நிலத்திற்கான இழப்பீட்டை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, பவர்கிரீட் அதிகாரிகள் மற்றும் விவசாயப் பிரதிநிதிகள் கூட்டத்தை நடத்தி தீர்மானிப்பது என்றும், உயர் மின்கோபுர திட்டத்தை எதிர்த்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முக்கிய கோரிக்கைகள் ஏற்றுக்கொண்டதையொட்டி போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

;