வலிமை பட விவகாரத்தில் தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர் வினோத் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து கடந்த பிப்.24 ஆம் தேதி வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.
மேலும் இப்படம் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றாலும், பல விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் வலிமை படத்தில் கதை மற்றும் கதாபாத்திரங்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக “மெட்ரோ” படத்தின் தயாரிப்பாளர் ஜெயகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். மேலும் தனக்கு ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் இயக்குநர் எச். வினோத் ஆகிய இருவரும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதனைதொடர்ந்து இந்த வழக்கை மார்ச் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.