tamilnadu

img

அரசு அலுவலகங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த கோரியவருக்கு ரூ.10000 அபராதம்- உயர் நீதிமன்றம்

லஞ்சத்தை ஒழிக்க அரசு அலுவலகங்களில் கண்காணிப்புக் கேமரா பொருத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் மனுதாரருக்கு ரூ.10000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.  
மதுரையை சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர், தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெறுவதை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவிடக்கோரி பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவில், அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து சான்றிதழ்களும் வாங்க லஞ்சம் கொடுக்க வேண்டி உள்ளது. இதை தடுக்க  அனைத்து அலுவலகங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தி உயர் அதிகாரிகள் கண்காணிக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, ஆதிகேசவலு  அமர்வில் இன்று  விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் எந்த ஆதாரமும் இல்லாமல், விளம்பரத்திற்காக மட்டுமே இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாக குற்றம் சாட்டினர். மேலும் மனுதாரருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, அடுத்த 2 ஆண்டுகளுக்கு எந்த பொதுநல வழக்கும் தொடரக்கூடாது என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர்.