ஓசூரில் இதய ஆரோக்கிய விழிப்புணர்வு சைக்கிள் மாரத்தான்
கிருஷ்ணகிரி, செப்.29 -
உலக இதய தினத்தை முன்னிட்டு ஓசூர் காவேரி மருத்துவமனை சார்பில் இதய ஆரோக்கிய விழிப்புணர்வு சைக்கிள் மாரத்தான் நடைபெற்றது.
காவேரி மருத்துவமனை இயக்குனர் ஜோஷ் வர்கீஸ் ஜாய், மருத்துவர் ஸ்ரீராம ஜெயம், அலுவலர் பிந்துகுமாரி ஆகியோர் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். இந்த சைக்கிள் மாரத்தானை மருத்துவர் ஸ்ரீராமஜெயம், அலுவலர் பிந்துகுமாரி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ், மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா, மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன் ஆகியோர் சைக்கிள் ஓட்டி துவக்கி வைத்தனர். சுமார் 800 பேர் கலந்து கொண்டு 15 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் சென்று வந்தனர்.
முன்னதாக, வாழ்க்கை முறையில் அன்றாட உடற்பயிற்சி அவசியம் என்றும், காவேரி மருத்துவமனையின் பேருந்துக் குள்ளேயே அனைத்து மருத்துவமும் பார்ப்பதற்கான வெல்னஸ் ஆன் வீல்ஸ் பேருந்து இயங்குவது பாராட்டுக்குரியது என்றும், பெருகிவரும் விரைவு உணவு கலாச்சாரத்தை கைவிட்டு, ஆரோக்கிய மான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் எம்எல்ஏ பிரகாஷ், மேயர் சத்யா ஆகியோர் வலியுறுத்தினர்.
இருதய அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் பிரசன்னா, இருதய மருத்துவ நிபுணர் அருள் ஞான சண்முகம் ஆகியோர் கூறுகையில், உலகளாவிய இதய நோய் மரணங்களுக்கு மாறிவரும் உணவு பழக்கமே முக்கிய காரணமாக இருந்து வருகிறது என்றனர்.
மன அழுத்தம், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், உடல் பருமன், நீரிழிவு, புகை பிடித்தல், மது, போதைப் பழக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் மார டைப்பு ஏற்படுகிறது. தற்போதைய காலத்தில் குறைந்த வயதினருக்கும் கூட இதனால் மாரடைப்பு வருவதைக் காண முடிகிறது என்றும், உடலுக்கு எதிரான கெட்ட பழக்கங்கள் அனைத்தையும் விட்டு விட வேண்டும் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்தினர்.
 
                                    