tamilnadu

அரசு பேருந்து மோதி அரசு மருத்துவர் பலி ரூ.2 கோடி இழப்பீடு வழங்க கோரிக்கை

அரசு பேருந்து மோதி அரசு மருத்துவர் பலி  ரூ.2 கோடி இழப்பீடு வழங்க கோரிக்கை

சென்னை, ஆக.19- செங்கல்பட்டு நகரில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து மோதி உயிரிழந்த அரசு மருத்துவர் குடும்பத்துக்கு ரூ. 2 கோடி இழப்பீடு, நிவாரணம் வழங்க தமிழக முதல்வருக்கு அரசு மருத்துவர்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர். செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த பச்சிளம் குழந்தை சிறப்பு மருத்துவர் மணிக்குமார் மற்றும் குழந்தைகளுக்கான அறுவைச் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பிரவீன் இருவரும் திங்கட்கிழமை(ஆக.18)  செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து அரசு மருத்துவமனையை நோக்கி சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது மிகவும் வேகமாக, கட்டுப் பாட்டை இழந்த அரசு பேருந்து ஒன்று மருத்துவர்கள் மீது மோதியது. அதில் படுகாயமடைந்த மருத்துவர் மணிகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மருத்து வர் பிரவீன் படுகாயத்துடன் இரண்டு கால்களி லும் எலும்பு முறிவுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. மருத்துவர் மணிக்குமாரின் வழிகாட்டுத லில், தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் மாதம் 50 முதல் 60 வரை இருந்த பச்சிளம் குழந்தைகள் இறப்பு, 10 ஆக குறைக்க முடிந்துள்ளது. இந்த நிலையில் அவரது மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தன்னுடைய முகநூலில் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், உயிரிழந்த மருத்துவர் மணிக்குமாரின் குடும்பத்திற்கு வருத்தத்தை யும், ஆறுதலையும் தெரிவித்துள்ள அரசு மருத்துவர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் எஸ். பெருமாள் பிள்ளை, மருத்துவர் மணிக்குமார் குடும்பத்திற்கு உடனடியாக 2 கோடி ரூபாய் நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பிரவீனுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அதேபோல், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.