tamilnadu

img

கட்டாய ஓய்வு அளிக்கும் முயற்சியை கைவிடுக... நாடு முழுவதும் அஞ்சல் ஊழியர்கள் போராட்டம்

சென்னை:
மத்திய அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கும் விதிகளை ரத்து செய்யக் கோரி செப்டம்பர் 9 புதனன்று நாடு முழுவதும் அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதன் ஒருபகுதியாக சென்னை தி.நகர் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு கோட்ட தலைவர் பார்த்திபன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனத்தின் மாநில பொதுச் செயலாளர் எம். துரைப்பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:மத்திய பாஜக அரசு பல்வேறு வகைகளில் தனியார்மயக் கொள்கைகளை அமல்படுத்தி வருகிறது. ரயில்வே,பாதுகாப்புத் துறை, வங்கி, இன்சூரன்ஸ் உள்ளிட்ட பொதுத்துறைகளை தனியாரிடம் ஒப்படைத்து வருகிறது. அஞ்சல் துறையை கார்ப்பரேட் நிறுவனங்களாக மாற்றி தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.இதற்கு எதிராக போராடுவதை தடுப்பதற்காக 55 வயது அல்லது 30 ஆண்டுகள் பணி முடித்த ஊழியர்களை எப்.ஆர். 56ஜெ, 56எல், சிசிஎஸ் பென்ஷன் விதி 48(1)படி கட்டாய ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ளது. அதற்கேற்ப மாதாமாதம் அறிக்கை அளிக்குமாறு துறை அதிகாரிகளை அரசு வலியுறுத்தி வருகிறது. இதற்கு எதிராக நாடு முழுவதும் ஊழியர்கள் ஆவேசத்தோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே, கட்டாய ஓய்வு அளிக்கும் விதிகளை திரும்பப் பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும். இல்லாவிடில் வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களை முன்னெடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.போராட்டத்தில் கோட்டச் செயலாளர்கள் செந்தில், துரை, செந்தில் குமார், கோபி உள்ளிட்டோர் பேசினர்.

;