சென்னை:
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.பழனிச்சாமி, பொதுச்செயலாளர் டி.ரவீந்திரன் ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:
கரும்பு விவசாய சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளராக எட்டு ஆண்டுகளுக்கு மேல் பொறுப்பேற்றுசெயல்பட்டவர். கரும்பு விவசாயிகளை அமைப்பாக திரட்டிட மாநிலம் முழுவதும் சென்று பணியாற்றினார். கரும்பு பண பாக்கியை பெற்றுத்தர, கரும்பு விலை நிர்ணயித்திட முத்தரப்புக் கூட்டம் நடத்திட கோரி, கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளை பாதுகாத்திட கரும்பு விவசாயிகளை அணிதிரட்டி பல போராட்டங்களை நடத்தியவர் ஜி.மணி அவர்கள்.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அம்பிகா சர்க்கரை ஆலை நிர்வாகத்திடம் கரும்பு பண பாக்கி கேட்டு பெண்ணாடத்தில் சவப்பாடை ஊர்வலம் நடத்திய போது காவல்துறை அனுமதி மறுத்து விவசாயிகளை கைது செய்து சிறையில் அடைத்தது. பொதுச்செயலாளராக இருந்த ஜி.மணி உட்பட 96 விவசாயிகள் 28 நாட்கள் கடலூர் சிறையில் இருந்தனர். போராட்டத்திற்கு பிறகு கரும்பு பண பாக்கியை நிர்வாகம் வழங்கியது.மாநில அரசு தன்னிச்சையாக கரும்புக்கு விலையை அறிவிக்கக் கூடாது. கரும்பு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கி முத்தரப்பு கூட்டம் நடத்தி கரும்புக்கு விலை நிர்ணயித்திட வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். உத்தரவு பெற்று அது நடைமுறைப்படுத்தப்பட்டது.
தமிழகத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்திற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த மகத்தான தலைவர். அவரது மறைவுக்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அவரை இழந்து துயருற்றிருக்கும் அவரதுகுடும்பத்தாருக்கு அனுதாபங் களையும் தெரிவித்துக் கொள் கிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.