யானைகள் நடமாட்டத்தை தடுக்க கோரிக்கை
கிருஷ்ணகிரி, அக்.9 – கிருஷ்ணகிரி நகராட்சி யொட்டியுள்ள மகராஜாகடை கிராம பகுதிக்கு ஆந்திரா மாநில வனப்பகுதியில் இருந்து வேப்பனப்பள்ளி வழியே யானைகள் கூட்டம் கூட்டமாக அடிக்கடி வந்து செல்கின்றன. மேலும், அந்தப் பகுதியில் விவசாயப் பயிர்களை முற்றிலும் அழித்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, 8க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக மகராஜாகடை கிராமப்பகுதியில் புகுந்து பலரது தோட்டங்களில் உள்ள வாழை மற்றும் விவசாயத்தை சேதப்படுத்தியது. தகவலின் பேரில் அங்கு வந்த வனத்துறை யினரும், கிராம மக்களும் பட்டாசுகள் வெடித்து யானை களை மீண்டும் ஆந்திர வனப்பகுதிக்கு விரட்டினர். யானைகள் இப்பகுதிக்கு வராமல் நிரந்தரமாக தடுப்ப தற்கு வனத்துறையினர் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சேதப்படுத்தப்பட்ட விவசாயத்தை மதிப்பீடு செய்து சரியான இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓசூர் மின்வாரிய அலுவலர் மீது பெண் ஊழியர் புகார்
கிருஷ்ணகிரி, அக்.9 – ஓசூர் காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த இளையராஜா. மின் வாரியத்தில் பணி புரிந்து வந்த நிலையில் 2013 ஆம் ஆண்டு உயிரிழந்தார். இதையடுத்து, இவரது மனைவி சுதா கருணை அடிப்படையில் ஓசூர் மின்வாரியத்தில் கணக்கீட்டாளராக பணியமர்த்தப்பட்டு கடந்த 12 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், ஓசூர் மகளிர் காவல் நிலையத்தில் சுதா புகார் மனு அளித்தார். அதில், மின்வாரிய அலுவலகத்தில் உதவிப் பொறியாளர் சுரேந்தர் என்பவர் கடந்த 6 மாதங்களாக தன்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்வதாகவும், தகாத வார்த்தைகளால் திட்டி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இப்புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து மகளிர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாட்டு வெடி தயாரித்தவர் கைது
கடலூர், அக்.9 – கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே திருவாமூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகாமையில் சட்டவிரோதமாக நாட்டு வெடிகள் தயாரிக்கப்பட்டு வருவதாக பொதுமக்களிடமிருந்து குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டபோது திருவாமூரை சேர்ந்த வெற்றிவேல் என்பவர் வெடிபொருள் தயாரித்ததாக கைது செய்தனர்.