tamilnadu

img

பட்டா வழங்கக் கோரி மலையடி குப்பத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

பட்டா வழங்கக் கோரி மலையடி குப்பத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

கடலூர், ஜூலை 17-  கடலூர் மாவட்டம், வெள்ளைக்கரை ஊராட்சியில் உள்ள மலையடி குப்பம் பகுதியில் ஐந்து தலைமுறைகளாக அரசு தரிசு நிலத்தில் வேளாண்மை செய்து வரும் விவசாயிகளுக்கு பட்டா வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் காத்திருப்பு போராட்டம் வியாழக்கிழமை (ஜூலை 17) இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்றது.  இந்த போராட்டத்தில் விவசாயிகள் போராட்டக் களத்திலேயே தங்கி இருந்து வருகின்றனர். இரவு முழுவதும் போராட்ட பந்தலிலேயே தூங்கிய போராட்டக்காரர்கள் அங்கேயே சமையல் செய்து உணவு உட்கொண்டனர். வியாழக்கிழமையும் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மலையடி குப்பம், வே. பெத்தாங்குப்பம், கொடுக்கன் பாளையம், கீரப்பாளையம், காட்டாரச்சாவடி உள்ளிட்ட கிராமங்களில் ஐந்து தலைமுறைகளாக அரசு தரிசு நிலத்தில்  வேளாண் பயிர் செய்து ஆண்டுதோறும் பயன்பெற்று வரும் விவசாயிகளுக்கு நில உரிமை பத்திரம் வழங்க வேண்டும் என்பதே  இந்த போராட்டத்தின் முக்கிய கோரிக்கையாகும். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.ஆர். ரவிச்சந்திரன் இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கி வருகிறார்.  மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் தொடங்கி வைத்தார். மாநிலத் தலைவர் டி. ரவீந்திரன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். புதன்கிழமை (ஜூலை 16) இரவு வருவாய்த்துறை அதிகாரி கள் பேச்சுவார்த்தை நடத்தினர். முதல மைச்சர் அறிவித்த திட்டம் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் எனவே போராட்டத்தை கைவிடுமாறும் கோரிக்கை விடுத்தனர். எனினும், தங்களின் கோரிக்கையான பட்டா வழங்கும் வரை இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.