500 பணி வாய்ப்புகளுடன் வேலைவாய்ப்பு முகாம்
விழுப்புரம், ஆக. 20 - விழுப்புரத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை (ஆக.22) நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சி யர் பெருந்திட்ட வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் இந்த முகாமில் 20-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு அளிக்கும் தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட பணி காலியிடங்கள் நிரப்ப உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை, ஐடிஐ, டிப்ளோமா, பிஇ, பி.டெக், நர்சிங், பார்மசி போன்ற கல்வித் தகுதியுடைய வேலை தேடும் இளைஞர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெறலாம். வேலைவாய்ப்பு பெறும் வேலை நாடுவோரின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படாது. பொது மற்றும் மாற்றுத்திறனாளி மனுதாரர்கள் தங்களின் அசல் கல்விச் சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் சுய விவரக் குறிப்புகளுடன் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சுரங்கவியல் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்
சிதம்பரம், ஆக,20 - சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டிற்கான (2025-26) மாணவர்கள் சேர்க்கை முடிவடைந்த நிலையில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி பல்கலைக்கழக சுரங்கவியல் பட்டய பயிற்சி துறையில் நடைபெற்றது. பட்டய படிப்பு துறையின் இயக்குநர் சரவணன் தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினராக என்எல்சி நிறுவனத்தின் உயர் அதிகாரி ஜாஸ்பர்ரோஸ் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் திருப்பதி சுரங்க பணி பற்றியும் மாணவர்களின் உடல் நலன் குறித்து பேசினார்.
தமுஎகச கிளை உதயம்
திருப்பத்தூர், ஆக.20- தமுஎகச திருப்பத்தூர் புதிய கிளை துவக்கப்பட்டது. க.சாமு தலைமையில் நடைபெற்ற இந்த துவக்க நிகழ்வில் கோ.ரவி வரவேற்க, சி கேசவன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாணிக்க முனிராஜ் துவக்கி வைத்து பேசினார். தூய நெஞ்சக் கல்லூரி பேராசிரியர் அஜய், தமுஎகச மேனாள் மாவட்ட தலைவர் முல்லை வாசன், ஆசிரியர் வெங்கடேசன் ஆகியோர் பேசினர். கிளைத் தலைவராக மாரிமுத்து, செயலாளராக சாமு, பொருளா ளராக ரவி உள்ளிட்ட 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை, ஆக.20- சென்னை, உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்ட அலுவலர்களின் கட்டிடத்தில், முழுமைக்கும் தூய்மைப் பணி மேற்கொள்ள தகுதிவாய்ந்த முன்அனுபவமுள்ள தூய்மைப்பணி மேற்கொள்ளும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஒப்பந்தப்புள்ளி அடிப்படையில் வரவேற்கப்படுகின்றன. 19.09.2025 அன்று மாலை 5.45 மணிக்குள் மூடி முத்தி ரையிடப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி ‘மாநில அரசு உரிமையியல் வழக்குரைஞர் அலுவலகம், (O/o. STATE GOVERNMENT PLEADER) சட்ட அலுவலர்கள் கட்டிடம், உயர்நீதிமன்றம், சென்னை 600 104. விண்ணப்ப உறை மேல் அலுவலகத் தூய்மைப் பணிக்காக” எனக் குறிப்பிடவும். மேலும் விவ ரங்களுக்கு 044 - 2534 1024 என்ற அலுவலகத் தொலை பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அலுவல கக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.