tamilnadu

img

யானை புகுந்த பூங்கா

கன்னித் தீவுக்கு சிந்துபாத் - நாட்டைக்
கண்ணீர்த் தீவாக்க அக்னிபாத்
இதுதான் எட்டாண்டு மன்கீபாத் - இனி
எங்கும் இன்குலாப் ஜிந்தாபாத்

ஆணவமும் அராஜகமும்
அதிகாரம் பெற்றால்
ராணுவமும் கூட
கார்ப்பரேட் மயமாகும்

அரசு செலவிலேயே
அவர்கள் கட்சிக்கு
அடியாட்கள் எடுத்து
பயிற்சிதரும் ஏற்பாடோ?

ஆர் எஸ் எஸ் இனி
அங்கீகாரம் பெற்ற
ஆர்மி ஆகுமோ?

விமானங்கள் தனியாருக்கு
ரயில்வே தனியாருக்கு
வங்கிகள் தனியாருக்கு
எல்ஐசி தனியாருக்கு
துறைமுகம் தனியாருக்கு
தொலைதொடர்பு தனியாருக்கு
மின்சாரம் தனியாருக்கு
மீன்கடல் தனியாருக்கு
நிலக்கரி சுரங்கங்கள்
முழுக்கவும் தனியாருக்கு
ஒப்பந்தம் பேசிஇன்று
முப்படையும் தனியாருக்கு
இன்னுயிர் ஈந்து பெற்ற
இந்தியா இனியாருக்கு?

யானைகள் புகுந்த மலர்க்காடு
போல ஆகுமோ நம்நாடு?

எப்படியோ பெற்றுவிட்டார்
மிருக பலத்தை
எதிர்பார்க்கலாமா
மனித குணத்தை?

துகிலுரிய வரும்கையைத்
துண்டிக்க வேண்டும் - நாம்
அம்மணமாய் ஆகும்முன்
தண்டிக்க வேண்டும்

- வல்லம் தாஜுபால்