தொடரும் மின்சார டிரான்ஸ்பார்மர் காயில் திருட்டு
விழுப்புரம், ஆக. 9- விழுப்புரம் - புதுச்சேரி - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் வளவனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அற்பிசம்பாளையம் கிராம பகுதிகளில் இரவு நேரத்தில் விவசாய நிலத்திற்கு பாசன பயன்பாட்டிற்கான மின்சார ட்ரான்ஸ்பார்மரில் மின்சார கோயில்களை தொடர்ந்து மர்ம நபர்கள் திருடி கொண்டு போகும் சம்பவம் நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆனத்தூர், ஆனங்கூர் ஆகிய கிராமப் பகுதிகளில் தொடர்ந்து இதுபோல் டிரான்ஸ்பார்மரில் காயில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். சிறிது நாட்கள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புறவழிச் சாலை அருகே உள்ள விவசாய நிலங்களுக்கு மின்சாரம் கொடுக்கும் மின்சார டிரான்ஸ்பார்மர் காயில் காப்பர் கம்பி திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. இரவு நேரத்தில் மட்டுமே இந்த திருட்டு சம்பவம் நடைபெறுகிறது. மின்சார டிரான்ஸ்பார்மர்கள் காப்பர் காயில்கள் திருடப்படுவதாக விடிந்த பிறகு மின்சாரம் இன்றி விவசாயிகள் பயிர்களுக்கு பாசன மோட்டார் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை காவல்துறையிடம் முறையாக புகார் அளிக்கிறார்களா என்பதும் தெரியவில்லை. மாவட்ட காவல்துறை தொடர் திருட்டில் ஈடுபடும் இந்த காப்பர் காயில் திருட்டு கும்பலை முறையாக கண்காணித்து அவர்களை பிடித்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே விவசாயிகள் பயிர் செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புறவழிச் சாலை அருகே உள்ள விவசாய நிலங்களில் பயிர் செய்யும் ஒட்டுமொத்த விவசாயிகள் மத்தியில் கோரிக்கை வலுத்து வருகிறது.