திருவண்ணாமலை, ஜுலை 9- திருவண்ணாமலை - திண்டிவனம் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது அண்ணாசாலை வட்டாட்சியர் அலுவலகம் அருகே பாலத்திற்கு கம்பங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அங்குள்ள உயர்மின் கோபுர விளக்கின் கீழ் பகுதியில் கொடுக்கபட்ட மின் இணைப்பு திறந்த நிலையிலேயே இருந்துள்ளது. இந்நிலையில் தியாகி அண்ணாமலை தெருவில் வசிக்கும் 4ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ரகுநாத் (9). செவ்வாயன்று மேம்பால பணி நடைபெறும் இடத்தின் உள்ள உயர்மின் கோபுர விளக்கு அருகே மணல் குவியலில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது சறுக்கி விழுந்த அவன் உயர்மின் விளக்கின் அடியில் இருந்த மின் இணைப்பில் மோதியதில் சிறுவன் மீது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானான். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பகுதி மக்கள் பெரியார் சிலை அருகே சிறுவனின் உடலோடு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர், காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டுவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.