சென்னை, ஜூலை 9 - கால்டாக்சிகளுக்கான கட்டணத்தை தமிழக அரசே நிர்ணயிக்க வேண்டும் என்று அனைத்து கால்டாக்சி சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. இந்தக்கோரிக்கையை வலியுறுத்தி செவ்வாயன்று (ஜூலை 9) சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப்போராட்டத்தில் மோட்டார் வாகன சட்டத்தை திருத்தக் கூடாது, பன்மடங்கு காப்பீட்டு கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வர வேண்டும், ஓலா, உபேர், பாஸ்ட்டிராக் போன்ற நிறு வங்களை முறைப்படுத்த வேண்டும், உள்ளூர் வாகனங்க ளுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கக் கூடாது, மாவட்ட தலைநகரங்களில் கால்டாக்சி நிறுத்தங்களை உருவாக்க வேண்டும், ‘ராபிட்டோ’ போன்ற பைக் டாக்சி முறையை தடுக்க வேண்டும், ஆர்டிஓ அலுவலக முறைகேடுகளை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முழக்கங்களாக எழுப்பப்பட்டன. போராட்டத்திற்கு தமிழ்நாடு கால்டாக்சி தொழிலாளர்கள் சங்க (சிஐடியு) மாநில பொதுச் செயலாளர் மு.பூபதி தலைமை தாங்கினார். சிஐடியு தலைவர் ஏ.பி.அன்பழகன், உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளர் ஜாகீர் உசேன், தோழர்கள் கார் ஓட்டுநர் அமைப்புசாரா தொழிற்சங்க செயலாளர் சரவணன் உள்ளிட்டோர் பேசினர்.