tamilnadu

img

நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடாதே... தில்லி வன்முறைக்கு காரணமானவர்களை கைது செய்க....

சென்னை:
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை ஒடுக்கக்கூடாது என்றும் தில்லி வன்முறைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து சங்கத்தின் மாநிலத்தலைவர் (பொறுப்பு)  மதுக்கூர் இராமலிங்கம், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசியமக்கள்தொகை பதிவேடு ஆகியமுப்பேரழிவுகளை எதிர்த்து அறவழியில் போராடுகிறவர்கள் மீது மத்திய அரசும் அதன் ஆதரவாளர்களும் நாடெங்கிலும் நடத்திவரும் கொடூர வன்முறைகளின் உச்சத்தை வடகிழக்கு தில்லியில்நிகழ்த்தியுள்ளனர். மாற்றுக்கருத்தை தெரிவிக்க மக்களுக்குள்ளஉரிமையை மறுக்கும்விதமாக நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதலை தமுஎகச கண்டிக்கிறது.சமூக அமைதி, மத நல்லிணக்கம்மற்றும் சட்டத்தின் ஆட்சியைக்குலைப்பதற்காக கட்டவிழ்த்துவிடப்பட்ட இந்த வன்முறைக்கு 35 உயிர்கள் பலியாகியுள்ளன. இவர்களில் பெரும்பாலோர் இஸ்லாமியர்கள். இன்னும் பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இஸ்லாமியர்களின் வீடுகளும் வாழ்வாதாரங்களும் வழிபாட்டுத்தலங்களும் சூறையாடப்பட்டுள்ளன. இந்து மற்றும் சீக்கியகுடும்பங்கள் பல மதவேறுபாடுகளைக் கடந்து இஸ்லாமியர்களை பாதுகாக்க முன்வந்திருக்காவிடில் உயிரிழப்பும் சேதாரமும் கூடுதலாகியிருக்கும். ஊடகவியலாளர்கள் தங்கள்பணியை சுதந்திரமாக செய்யவிடாமல் தடுக்கப்பட்டுள்ளனர். 

பல்லாயிரம் பேர் மீது பொய் வழக்கு
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கூடியவர்கள், பேசியவர்கள், கவிதை எழுதியவர்கள், சமூக ஊடகங்களில் பதிவிட்டவர்கள், செய்தியாளர்கள் எனபல்லாயிரக்கணக்கானவர்கள் மீதுபொய்வழக்குகளைப் புனைந்துள்ள  காவல்துறையினர், தில்லிகலவரத்தைத் தூண்டிய- ஈடுபட்ட ஒருவர் மீது கூட வழக்கு தொடுக்கவில்லை.  இந்த வன்முறைக்கு காரணமானவர்கள் என்று  தில்லி உயர்நீதிமன்றத்தாலும் பாதிக்கப்பட்ட மக்களாலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ள அனைவரும், அவர்களது தூண்டுதலால் கொலை கொள்ளை, வழிபாட்டுத்தலங்கள் அவமதிப்பு உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் மீதும் சட்டப்பூர்வநடவடிக்கை எடுக்க வேண்டும். குடிமக்களின் உயிரையும் உடைமைகளையும் பாதுகாப்பதுடன் சட்டம் ஒழுங்கையும் பொதுஅமைதியையும் நிலைநாட்டவேண்டிய காவல்துறையினர் இந்த கடமையிலிருந்து வழுவியதோடு பல இடங்களில் சங்பரிவார்கலவரக்காரர்களோடு இணைந்து இஸ்லாமியர்கள் மீது தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளனர். 

சங் பரிவாரத்தின் அடியாளாக காவல்துறை 
மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச நெறிமுறைகளுக்கும் நீதிமன்ற வழிகாட்டுதல்களுக்கும் புறம்பாக சங்பரிவார கும்பலின் அடியாள்படை போல செயல்பட்ட காவல்துறையினர் மீது துறைரீதியாகவும் குற்றவியல் சட்டங்களின் படியாகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவும் பாதிப்பை உருவாக்கிய குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படியாகவும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும்விதமாகவும் தில்லி உயர் நீதிமன்றம் அடுத்தடுத்து மேற்கொண்ட வலுவான தலையீட்டிற்குப் பிறகே தில்லியில் நிலைமை ஓரளவுக்கு கட்டுக்குள் வரத்தொடங்கியிருக்கிறது. 

அத்தகைய தலையீட்டை மேற்கொண்டதுடன் அரசியல் சாசனம் வழங்கியுள்ள பொறுப்புகளை உணர்ந்து நிறைவேற்றும்படியாக ஆட்சியாளர்களுக்கு அறிவுறுத்திய தில்லி உயர்நீதிமன்ற ஆயத்தின் நீதிபதிகளில் ஒருவரை அடுத்த 24 மணிநேரத்திற்குள் அரசுஇடமாறுதல் செய்துள்ளது. நீதித்துறையின் சுயேச்சைத்தன்மையை முடக்குவதற்கு மேற்கொண்டுள்ள  இந்த இழிமுயற்சியை அரசு கைவிடவேண்டும். இந்த வழக்கு முழுமையாக எவ்வித குறுக்கீடுமின்றி விசாரித்து முடிக்கப்படும் வரை அவர் இடமாற்றம் செய்யப்படக்கூடாது என்று நாடெங்கும் எழுந்துள்ள கோரிக்கையுடன் தமுஎகச இணைகிறது.  

தமுஎகச அணிதிரட்டும்
குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்த இப்போராட்டத்தை மதரீதியான மோதலாக சித்தரித்து அதை ரத்தவெள்ளத்தில் மூழ்கடிக்க ஆளுங்கட்சி உள்ளிட்ட சங் பரிவாரத்தினர் கட்டவிழ்த்துவிட்டுள்ள வன்முறைகளை கண்டிப்பதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதும் அவசியம்தான் என்றாலும் இத்தகைய வன்முறைகள் நிகழும்முன்பே தடுப்பதற்கான பணிகளுக்கே முன்னுரிமை வழங்கவேண்டியுள்ளது. வன்முறைகளாலும் அச்சுறுத்தல்களாலும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை பின்வாங்கச் செய்யமுடியாது என்ற எச்சரிக்கையை நாட்டின் கூட்டுக்குரலாக ஒலிக்கச் செய்திட, இந்தச் சட்டத்தால் தங்களுக்கு பாதிப்பில்லை என்கிற கற்பிதத்திலும் மெத்தனத்திலும் இருப்பவர்களையும் அணிதிரட்டுவதற்கு தன்னாலான பணிகளை தமுஎகச தீவிரமாக முன்னெடுக்கும்.இவ்வாறு அதில் கூறப்பபட்டுள்ளது.

;