சென்னை:
வேலை உறுதியளிப்பு திட்டத் தொழிலாளர்களை சாதி ரீதியாக வகைப்படுத்தும் உத்தரவைத் திரும்பப் பெற வேண்டுமென இடதுசாரி விவசாயத் தொழிலாளர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
இடதுசாரி விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் தீண்டாமை ஒழிப்பு மற்றும் ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை பாதுகாப்பு அமைப்புகளின் கலந்தாலோசனைக் கூட்டம் வியாழனன்று சென்னையில் தோழர் பி.இராமமூர்த்தி நினைவகத்தில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நா.பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் எஸ்.திருநாவுக்கரசு, வீ.அமிர்தலிங்கம், எஸ்.சங்கர், அ.து.கோதண்டம் ஆகியோரும் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் அ.பாஸ்கர், நா.சாத்தையா, பி.கணேசன் ஆகியோரும், தீண்டாமை ஒழிப்புமுன்னணி சார்பில் கே.சாமுவேல் ராஜ்,ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத் தின் சார்பில் மு.வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை செய்து வரும் தொழிலாளர்களை சாதி ரீதியாக வகைப்படுத்துவது, செலவுகளை கணக்கிடுவது, வேலைகளை தேர்வுசெய்வது என பாகுபடுத்தும் சட்டவிரோதமான உத்தரவை ஒன்றிய அரசின் ஊரகவளர்ச்சித்துறை அமைச்சகம் பிப்ரவரி 2021ல் வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவை செயல்படுத்தும்படி மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.ஒன்றிய அரசின் தொழிலாளர் ஒற்றுமைக்கு எதிரான பிளவுபடுத்தும் நோக்கம் கொண்ட ஊரக வளர்ச்சித்துறை உத்தரவின் எதிர்மறை விளைவுகள் குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. பின்னர் கீழ்க்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொழிலாளர்களை பிளவுபடுத்தும் உத்தரவுகளை ரத்து செய்விவசாயத் தொழிலாளர்களின் நீண்டபோராட்டத்தின் விளைவாகவும், நாடாளுமன்றத்தில் இடதுசாரி கட்சிகள் வலுவாக தலையிட்டு அழுத்தம் கொடுத்ததாலும் 2005 செப்டம்பர் மாதத்தில் மகாத்மா காந்திதேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள சட்டத்தை பாஜக ஆட்சி அமைந்த 2014 ஆம் ஆண்டு முதல் சிதைத்து, சீர் குலைத்து, அழித்து விட முயற்சித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஒன்றிய அரசின்ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்களை சாதி ரீதியாக பிளவுபடுத்தி பகை, வெறுப்புவளர்க்கும் தீய நோக்கத்துடன் மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. கிராமப்புற தொழிலாளர் விரோத அறிவுரையைஒன்றிய அரசு உடனடியாக ரத்து செய்யவேண்டும் என கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
தமிழ்நாடு அரசு நிராகரிக்க வேண்டும்
விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களை சாதிய ரீதியாக பிளவுபடுத்தும் ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சித்துறையின் 2021 மார்ச் 5-ம் தேதியிட்ட உத்தரவை தமிழ்நாடு அரசு நிராகரிக்கவேண்டும். இந்த அறிவுரையை திரும்பப் பெறுமாறு ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதவேண்டும் என மாநில அரசைக் கேட்டுக் கொள்கிறது.
வட்டமேசை மாநாடுகள்
ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சித்துறை உத்தரவுக்கு எதிராக கிராமப்புற தொழிலாளர்களின் ஆதரவைத் திரட்டவும், தொடர் போராட்டங்களை மேற்கொள்ளவும், மாவட்ட, வட்ட, வட்டார அளவில் ஆகஸ்ட்20 முதல் வட்டமேசை மாநாடுகளை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. அடுத்த கட்ட இயக்கம் குறித்து செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் கூடி அறிவிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.