tamilnadu

உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை மேகதாதுவில் அணை கட்டாதீர்! கர்நாடக அரசுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

சென்னை, ஜூன் 15 - உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும்வரை மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை கர்நாடக அரசு நிறுத்திவைக்க வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. மேகதாது அணை பிரச்சனை தொடர்பாக கர்நாடக முதலமைச்சர்  வெளியிட்டுள்ள அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் புதனன்று அறிக்கை வெளி யிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது: கர்நாடக முதலமைச்சர்  மேகதாது அணை தொடர்பாக அளித்துள்ள அறிக்கை   புதன்கிழமை (ஜூன் 15)  பல செய்தித் தாள்களிலும், ஊடகங்களிலும் வெளிவந்துள் ளது. அவ்வறிக்கை முற்றிலும் ஏற்புடை யதல்ல. மேகதாது அணை பிரச்சனை தமிழக விவசாய குடிமக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சனையாகும். இதை அரசியலாக்கும் அவசியமோ, எண்ணமோ, தமிழ்நாடு அரசிற்கு இல்லை.  தமிழ்நாடு முதலமைச்சர் இப்பிரச்சனை குறித்து பிரத மருக்கு கடிதம் எழுதியுள்ளதை அரசியல்  ஆதாயத்திற்காக என்று கொச்சைப் படுத்துவது ஏற்புடையதல்ல. நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில  நாளிதழில் வெளிவந்துள்ள செய்தியில், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இது வரை 15 கூட்டங்கள் நடத்தி உள்ளதாகவும், இக்கூட்டங்களில் தமிழ்நாடு அரசு பங்கேற்கவில்லை எனவும்  கர்நாடக முதலமைச்சர் தெரிவித்திருப்பது விந்தை யாக உள்ளது. இது முற்றிலும் தவறான செய்தி யாகும். கர்நாடக அரசின் அதிகாரிகள் இது  குறித்து  கர்நாடக முதலமைச்சருக்கு சரி யான தகவல்கள் அளிக்கவில்லை போலும். இக்கூட்டங்களில் தமிழ்நாடு அரசு உறுப்பி னர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றது பற்றிய விவரங்கள் கூட்ட அறிக்கைகளில் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. காவிரி நடுவர்மன்றம், படுகை மாநில வாரியாக திட்டங்களை ஆராய்ந்து, திட்ட வாரியாக ஒவ்வொரு திட்டத்திற்கும் எவ்வ ளவு நீர்த் தேவை என்பதை கணக்கிட்டு நீரை பங்கீடு செய்துள்ளது. சில திட்டங்களை நிரா கரித்தும் உள்ளது. இதனை உச்சநீதிமன்றம் தனது 16.02.2018 ஆணையில் முழுமையாக உறுதி செய்துள்ளது. உண்மை இவ்வாறு இருக்க, இறுதி ஆணையில் இல்லாத ஒரு பெரிய நீர்த்தேக்க திட்டத்தை மேகதாதுவில், அதுவும் கர்நாடகாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நீர்ப்பங்கீட்டிலேயே கட்ட இருப்பதாக தெரி வித்துள்ளது உச்சநீதிமன்றத்தின் ஆணை யை மீறும் செயலாகும்.

அரசியல் சாசன அமைப்பின்படியும், கூட்டாட்சித் தத்துவத்தின் படியும், மாநிலங்கள் உச்சநீதிமன்ற ஆணை யை மதித்து நடக்க வேண்டும். அதை மீறுவது சட்டத்திற்கு புறம்பானது. மேலும், உச்சநீதிமன்ற ஆணையின்படி, “எந்த மாநிலமும் பன்மாநில நதியின் நீருக்கு தனிப்பட்ட உரிமை கொண்டாட முடியாது (பத்தி 446.7)” கர்நாடக அரசு பெங்களூரு மாநகர குடிநீர் வழங்கலுக்கு தேவையான கட்டமைப்புகளை ஏற்கனவே முடித்துள்ள நிலையில், தற்போது மேகதாது நீர்த்தேக்க திட்டத்தை, குடிநீர்த் தேவைக்காக என்ற போர்வையில், அதுவும் 4.75 டி.எம்.சி தேவைக்காக, 67.6 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட ஒரு பெரிய அணையை கட்ட  முயற்சிப்பது ஏற்புடையதல்ல. உச்சநீதி மன்றத்தில் இப்பிரச்சனை குறித்த வழக்குகள் நிலுவையிலுள்ள போது, கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முயற்சிகள் மேற்கொள்வது சட்டத்திற்கு புறம்பான தாகும். ஆகையால், உச்சநீதிமன்றம் இப்பிரச்சனைக்கு தீர்வு அளிக்கும் வரை  மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என கர்நாடக முதலமைச்சரை தமிழ்நாடு அரசின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

;