tamilnadu

img

விகடன் கட்டுரைக்கு மறுப்பு .....

ஆனந்த விகடன் தனது இணையத்தில், கேரள அரசு தமிழ் நாட்டு தொழிலாளர்கள் உட்பட அந்நிய மாநில தொழிலாளார்களை வாகனங்களில் ஏற்றிக்கொண்டு வந்து தமிழக எல்லையில் இறக்கி விட்டுச் சென்றதாகவும் அதனால் எல்லையில் அந்தத் தொழிலாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானதாகவும் வடித்து ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது...

ஆனந்த விகடன் கூறும் குற்றச் சாட்டு என்ன? கேரளாவில் உள்ள தமிழர்களை, தமிழ் நாட்டு தொழிலாளர்களை எல்லையில் கொண்டு வந்து இறக்கிவிட்டுச் சென்றார்கள்...அது எவ்வளவு என்றால் ஆயிரக்கணக்கில்.... ஆயிரக்கணக்கான தொழிலார்களை வலுக்கட்டாயமாக கொண்டு வந்து இறக்கிவிட்டுச் சென்று விட்டார்கள் என்பதே குற்றச்சாட்டு...

உண்மையில் இரண்டு தினங்களுக்கு முன்பு, மத்திய அரசால், அகில இந்திய அளவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போது எல்லா புலம்பெயர் தொழிலாளர்களும் தங்கள் சொந்த ஊரை நோக்கி படையெடுக்கும் நிலை ஏற்பட்டது...
அந்த வகையில் தான் தமிழ்நாட்டில் சென்னை கோயம்பேட்டில் வரலாறு காணாத வகையில் மக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்லும் நோக்கில் கூடினார்கள்...

தமிழக அரசு மாநில அளவிலான ஊரடங்கு உத்தரவை கடந்த திங்கள்கிழமை அறிவித்த உடனேயே, சென்னை சென்ட்ரல் நோக்கி ஆயிரக்கணக்கான வடமாநிலத் தொழிலாளர்கள் படையெடுத்து தங்கள் சொந்த ஊரை நோக்கிச் செல்வதற்காகக் குவிந்தனர்...

என்ன காரணம்...?

இங்கே அனைத்து ஆலைகளும் மூடப்பட்டுவிட்டன... தங்களுக்கு வேலையில்லை...அதனால் வருமானம் இல்லாததோடு கையில் இருக்கும் சொற்ப பணமும் வீணாக செலவாகும் நிலை, உணவு கிடைக்காமல் பசியில் அவதியுறும் நிலை, மாதக்கடைசி என்பதால் இன்னும் சம்பளம் வாங்காததால் கையில் காசு இல்லாத நிலை ஆகியவற்றால், இங்கே அவதியுறும் ஆபத்து வந்துவிடும் என்ற பயம் முதலிய காரணங்களுக்காக, எப்படியாவது சொந்த ஊருக்கு சென்று சேர்ந்துவிட வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் உருவாகும்...அதனால் உடனடியாகக் கிளம்பி தங்கள் சொந்த ஊருக்குச் செல்லும் நோக்கில் சென்னை சென்ட்ரல் நோக்கிப் படையெடுத்தார்கள்... இதோடு மற்ற ஊர்களில் இருந்து வந்தவர்களும் சேர்ந்து பெரும் கூட்டம் சேர்ந்தது....இதில் அவர்களைக் குற்றம் சொல்லி எந்த பயனும் இல்லை...

டெல்லியில் பணி செய்யும் பலரும், பல கிலோமீட்டர்கள் நடந்தே ஊரைப் பார்த்து போகிறார்கள்...வேறு வழியில்லை...

இதே விஷயம் தான் சென்னை கோயம்பேட்டில் செவ்வாய்க்கிழமை நடந்த விஷயமும்...அரசு என்ன செய்திருக்க வேண்டும்...? ஏரளாமான பேருந்துகளை ஏற்பாடு செய்திருக்க வேண்டும்...அல்லது இவர்களை முறைபடுத்தி ஊருக்குச் செல்ல அனுமதித்திருக்க வேண்டும்...போதுமான பேருந்துகள் இல்லாமல் ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில குழுமி ஒட்டுமொத்த தமிழகத்தையும் பதைபதைக்க வைத்தனர்...மாநகர போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான பேருந்துகளையாவது ஏற்பாடு செய்திருக்க வேண்டும்...
எந்த முன்னேற்பாடும் இல்லாததால், ஏராளமானவர்கள் ஒரே இடத்தில குழுமிய காட்சிகளை பார்த்தவர்கள் மனம் பதைபதைத்தனர்....

ஏராளமான வடமாநிலத் தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக கன்டெய்னர் லாரிகளில் ஏறிச் செல்லும் காட்சிகள், இன்றைய ஊடகங்களில் வெளியாகியுள்ளது...இதனை போலீசார் தடுத்து வருகின்றனனர...

இதுபோலவே தான் கேரளாவிலும் அங்காங்கே வேலை பார்த்துவந்த தொழிலாளர்கள் தங்கள் ஊருக்குச் செல்ல முயன்றனர்...ஏற்கனவே ஒட்டுமொத்த நாட்டிலும் அனைத்துவிதமான போக்குவரத்தும் முடங்கிப்போய் நிற்கும் நிலையில் இவர்கள் ஊருக்குச் செல்வது எனபது பாதுகாப்பானது அல்ல என்பதைக் கூறி கேரள போலீஸ் தடுக்க முயன்றார்கள்...

அதையும் மீறி சில இடங்களில் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்லும் முயற்சியில் இறங்கினர்...சிலர் சிறு சிறு வாகனங்களிலும் சிலர் நடந்தும் பாலக்காடு-கோயம்புத்தூர் எல்லையான வாளையார் சுங்கச் சாவடியில் ஆயிரக்கணக்கில் வந்து சேர்ந்தனர்...அவர்களைப் பற்றிய தகவல்களைச் சேகரிப்பதில் இருந்து கொரோனா தொற்று இருக்கிறதா என்பதைப் பரிசோதனை செய்வது வரையில் சில அவசியமான பணிகளின் பேரில் ஏற்பட்ட காலதாமதத்தால் ஆயிரக்கணக்கானவர்கள் ஒரே இடத்தில் கூடும் நிலையும் ஏற்பட்டது...இவை யாவும் தொலைக்காட்சிகளில் செய்தியாக வெளியாகியுள்ளன..

.சம்பத்தப்பட்ட தொழிலாளர்கள், தங்களுக்கு கேரளாவில் தங்குவதால் ஏற்படும் சிரமங்கள் பற்றி பேசுவது கூட வெளியானது...

பாலக்காடு இரயில்வே நிலையத்தில் நூற்றுகணக்கான வடமாநிலத் தொழிலாளர்கள் இரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், இரயில் நிலையத்தில் சிக்கித் தவித்தனர்...இவர்களை அந்தப் பகுதியில் உள்ள ஆட்டோ தொழிலாளர்கள், உணவளித்து ஆறுதல்படுத்தி, சில தொலைகாட்சி செய்தியாளர்களுக்குத் தகவல் தெரிவித்து, அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்...இதனை அறிந்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு அவர்களுக்கு இந்த ஊரடங்கு உத்தரவு வாபஸ் ஆவது வரையிலும் தங்குவதற்கான ஏற்பாடும் உணவும் கிடைக்க உத்தரவாதம் செய்துள்ளது...

அதே போல் கண்ணூர் இருட்டி என்னும் ஊரில் வீட்டுவேலை செய்து வந்த தமிழகத் தொழிலாளர்களை சில வீடுகளில் இருந்து உடமையாளர்கள், வெளியேற்றியாதால் அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டதன் பேரில், மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் அதே பகுதியில் அனைவரையும் தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது...

அதோடு இத்தகைய பிரச்சனைகள் பெரிய அளவில் நோய் பரவுவதற்கான காரணமாக அமைவதால் சம்ந்தப்பட்ட தொழிலாளர்களை, நோயினால் பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளிவிடக்கூடாது, என்பதைக் கணக்கில் கொண்டு, கேரள அரசு விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளது...ஆதரவற்று தெருவில் அலையும் நபர்கள் பிச்சைக்காரர்கள், வெளிமாநிலத் தொழிலாளர்கள், வெளியூரிலிருந்து வந்து ஊர் திரும்ப முடியாதவர்கள், நடுவழியில் மாட்டிக்கொண்ட பயணிகள், சுற்றுலாப்பயணிகள் போன்ற அனைவரையும் தேடிக் கண்டுபிடித்து சிறப்பு தங்குமிடங்களை சுகாதாரமான முறையில் அமைத்து, அங்கே தங்க வைத்ததுடன் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வருவது வரை உணவுக்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.

திருவனந்தபுரத்தில் புகழ் பெற்ற புத்தரிக்கண்டம் மைதானத்தில் திருவனந்தபுரம் நகரில் உள்ள இதுபோன்ற நபர்களை தங்கவைக்க சிறப்பு முகாம் ஏற்படுத்தப் பட்டுள்ளது...அதுபோன்று ஆலுவா நகரில் உள்ள ஒரு கல்லூரி விடுதியை முழுவதுமாக சுத்தம் செய்து இதுபோன்றவர்களுக்கு சுகாதாரமான முறையில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது...

இவ்வாறு கேரளம் முழுவதும் ஏராளமான தங்கும் முகாம்கள் அமைக்கப்பட்டதில் பெரும்பாலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட வெளிமாநிலத் தொழிலாளர்கள் ஏராளமானவர்கள் தங்கியுள்ளனர்...

இவர்களுக்கான உணவை ஏற்பாடு செய்வதில் பெரும் பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து ஒவ்வொரு சிறு கிராமப் பஞ்சாயத்து உட்பட எல்லா நகராட்சி, மாநகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளின் ஏற்பாட்டில் சமூக சமையலறையை ஏற்பாடு செய்து உணவு தயாரித்து கொடுக்கும் வேலையைச் செய்து வருகின்றனர்...இதில் குடும்பஸ்ரீ என்னும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்....

இத்துடன் ஏற்கனவே இடப்பட்ட அரசின் திட்டப்படி திறக்கப்பட இருந்த ரூபாய் 20-க்கு சாப்பாடு வழங்கும் உணவகங்களை கேரளமெங்கும் 1000 இடங்களில் திறந்து அதன் மூலம் உணவு தயாரித்து வீடுகளுக்கு விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது...
வெளிமாநிலத் தொழிலாளர்களை முறைப்படுத்தி, அவர்களின் உரிமைகளை அவர்களுக்கு கிடைக்கச்செய்யும் நோக்கில் அனைவருக்கும் அடையாள அட்டைகள், ரேஷன் கார்டுகள், இன்சுரன்ஸ் போன்ற வசதிகள், ஏற்கனவே செய்யப்பட்டு உள்ளதால், அவர்களை இனம் காணவும் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவும் கேரள அரசால் எளிதாக முடிந்திருக்கிறது...
ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும், அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களின் ஆதார் அட்டையின் அடிப்படையில் ரேஷன் பொருட்கள் வழங்க, கேரள அரசால் முடிவு செய்யப்பட்டுள்ளது...இந்த பலனை அடைய, மாநிலம், மொழி, இனம், மதம், ஜாதி போன்ற எந்த
பாகுபாடுகளும் இல்லை....!

வேறு எந்த அரசும் இத்தகைய நடவைக்கைகளை எடுக்காத நிலையில்....கேரள அரசு, இவ்வளவு முயற்சிகளை.... தனது சக்திக்கு மீறி பல்வேறு பொருளாதாரச் சிக்கல்களுக்கு இடையிலும், மத்திய அரசு அறிவிப்பதற்கு முன்னரே பிரச்சனைகளை முன்னுணர்ந்து நடவடிக்கை எடுத்து செயல்பட்டுவருகிறது.

கடந்த திங்களன்று புளியரை தமிழக கேரள எல்லைச் சுங்கச் சாவடியில் துபாயில் இருந்து திருவனந்தபுரம் வழியாக நாடு திரும்பிய 4 தமிழகத் தொழிலாளர்களுக்கு கொரோனா நோய் அறிகுறி இருப்பது தெரிந்து பாதுகாப்பாக 4 ஆம்புலன்ஸ் மூலம் தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து முறைப்படி ஒப்படைக்க வந்த போது எல்லையில் காவல்துறையினர் அந்த ஆம்புலன்ஸ்களைத் திருப்பி அனுப்பி வைத்தனர்.

ஆனந்தவிகடன் போன்ற பத்திரிகைகள் கேரள அரசே தமிழர்களை அங்கிருந்து வெளியேற்றுகிறது என்ற தொணியில் கட்டுரை எழுதுவது சரியா என்பதை யோசிக்க வேண்டும்.
#Break_The_Chain