கூட்டுறவு சங்க தேர்தலை உடனே நடத்தக் கோரிக்கை
திருவண்ணாமலை, அக். 11- கூட்டுறவு சங்க தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்று கரும்பு விவசாயி கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை கிளை மாநாடு திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி-ஆரணி சாலையில் சனிக்கிழமையன்று(அக்.11) நடைபெற்றது. கிளைத் தலைவர் பெ.அரிதாசு தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் நா.முனியன் முன்னிலை வகித்தார். மாநிலப் பொருளாளர் சி.பெருமாள் துவக்கி வைத்தார். விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.கே.வெங்கடேசன், மாவட்டச் செயலாளர் எ.லட்சுமணன், வட்டத் தலைவர் ந.ராதாகிருஷ்ணன், செய்யார் செயலாளர் ஜெயக்குமார், தொழிற்சங்க தலைவர் அப்துல் காதர், டி.வெங்கடேசன், மாதர் சங்க நிர்வாகி சுகுணா, வாலிபர் சங்க நிர்வாகி திலக ராஜ், விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி மோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகி வி.கே.பெருமாள், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை செயலாளர் ஸ்ரீநாத், போளூர் தரணி சக்கரை ஆலை செயலாளர் கே.பாலமுருகன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநிலத் தலைவர் சு.வேல்மாறன் நிறைவுரையாற்றினார். நிர்வாகிகள் தேர்வு தலைவராக பெ.அரிதாசு, செயலாளராக ஜீ.சூரியகுமார், பொருளாளராக வெ.நாராயணமூர்த்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானம் விவசாயிகள் குறைதீர்வு கூட்டங்களை விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் என பெயர் மாற்றி வட்ட அளவில் நடத்த வேண்டும், செய்யாறு உள்ளிட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் காலிப்பணி யிடங்களை உடனே நிரப்பிட வேண்டும், கூட்டுறவு சங்க நிர்வாக குழு தேர்தலை உடனே நடத்த வேண்டும், செய்யாறு சர்க்கரை ஆலைக்கு மின்வாரிய நிர்வாகம் தரவேண்டிய ரூபாய் 110 கோடியை உடனே வழங்க வேண்டும், மத்திய அரசு கரும்பு டன் ஒன்றுக்கு 5500 எஃப்ஆர்பி விலை நிர்ணயம் செய்திட வேண்டும், மாநில அரசு தேர்தல் வாக்குறுதிப்படி டன் ஒன்றுக்கு ரூபாய் 4000 நடப்பு ஆண்டிலேயே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
