tamilnadu

img

வனத்துறையினர் காவலில் பழங்குடியினத்தவர் கொலை - சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட சிபிஎம் வலியுறுத்தல்!

உடுமலை வனத்துறை அலுவலகத்தில் பழங்குடியினர் மாரிமுத்து வனத்துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிடின் மாநிலச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே சின்னாறு கிராமம் பழங்குடியினத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரை விசாரணை என்ற பெயரில் வனத்துறையினர் அழைத்துச் சென்று அடித்து வனச்சரக அலுவலகத்திலேயே அவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. வனத்துறையினரால் நிகழ்த்தப்பட்ட இந்த படுகொலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
பழங்குடி வகுப்பைச் சார்ந்த மாரிமுத்து மற்றும் சிலருக்கும் விவசாய நிலம் தொடர்பாக வனத்துறையினருடன் முரண்பாடு இருந்துள்ளது. இதன் காரணமாக அவர் மீது பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கில் ஜூலை 29 அன்று உடுமலை நீதிமன்றத்தால் மாரிமுத்து குற்றமற்றவர் என்று விடுதலை செய்யப்பட்டார். ஜூலை 30 அன்று தனது வழக்கறிஞரின் அழைப்பின் பேரில் மாரிமுத்து நீதிமன்ற நடைமுறைகளுக்காக உடுமலைக்கு வந்துவிட்டு அரசுப் பேருந்தில் தனது ஊர் திரும்பிய போது சின்னார் வனச்சோதனை சாவடியில் வனத்துறையினர் அவரை வலுக்கட்டாயமாக பேருந்திலிருந்து இறக்கி உறவினர்கள் யாருக்கும் தகவல் அளிக்காமல் வனச்சரக அலுவலகத்திற்கு இழுத்துச் சென்று அடித்து சித்தரவதைக்கு உள்ளாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது. உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்துள்ளன. வனத்துறையினரால் நிகழ்த்தப்பட்ட இந்த படுகொலையை மூடி மறைப்பதற்கு மாரிமுத்து சிறுத்தையின் பற்களை கடத்தி வந்ததாகவும், விசாரணையின் போது கழிவறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளதானது நம்பத்தகுந்ததாக இல்லை. சட்டத்திற்கு விரோதமான இத்தகைய கொடுஞ்செயலை சீருடை பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபடுவதை தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாரிமுத்துவின் மரணத்திற்கு காரணமான வனச்சரகர் உள்ளிட்டு வனத்துறையினர் அனைவர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, உடனடியாக பணி நீக்கம் செய்திட வேண்டுமெனவும், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டுமெனவும், இவ்வழக்கை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் விசாரிக்க சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.