வணிக வளாகத்தில் டாஸ்மாக் கடையை மூட சிபிஎம் வலியுறுத்தல
சென்னை, ஆக. 12- மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாதவரம் செங்குன்றம் பகுதி செயலாளர் வி.கமல நாதன் டாஸ்மாக் நிர்வாக மேலாளரை சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 32ஆவது வட்டத்தில் பிவிஆர் புட் ஸ்ட்ரீட் என்ற வணிக வளாகம் உள்ளது. இதில் டீ,குளிர்பானக்கடைகள் உள்ளன. இந்நிலையில் இந்த வளாகத்தில் திடீரென அரசு மதுபானக் கடை கடும் எதிர்ப்புக்கு இடையே திறக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தின் அருகே உள்ள ஏற்றுமதி ஆடை நிறுவனத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பணி புரிகின்றனர். மேலும் தனி யார் பள்ளிகள், பேருந்து நிறுத்தம், வழிபாட்டு தலம் உள்ளன. இந்த சந்திப்பு வழியாக பள்ளி, கல்லூரி, வேலை என தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சென்று வரு கின்றனர். எனவே உடனடியாக மதுபானக் கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை யென்றால் மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என அதில் கூறப்பட்டுள்ளது. மாமன்ற உறுப்பினர் ஏழுமலை, சிபிஎம் நிர்வாகிகள் வி.சரவணன், கே.கார்த்திக், எம்.சரவணன் தர்ஷன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.