சிபிஎம் கவுன்சிலர் கோரிக்கையை ஏற்று தூய்மை பணியாளர்கள் நியமனம்
சென்னை, ஆக. 22- சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 4ஆவது வார்டில் ராமநாதபுரத்தில் ஒரு நடுநிலைப் பள்ளியும், எர்ணாவூரில் ஒரு துவக்கப் பள்ளி மற்றும் ஒரு உயர்நிலைப் பள்ளி என 3 மாநகராட்சி பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் உடனடியாக தூய்மை பணியாளர்களை நியமிக்க வேண்டும், இல்லையென்றால் தொடர் போராட்டம் நடத்தப் போவதாக மண்டலக் குழு கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் அறிவித்தார். இதையடுத்து ராமநாதபுரத்தில் ஒரு நடுநிலைப் பள்ளிக்கு 2 தூய்மை பணியாளர்கள், எர்ணாவூர் துவக்கப் பள்ளிக்கு ஒரு தூய்மை பணியாளர், உயர்நிலை பள்ளிக்கு ஒரு தூய்மை பணியாளர் என மொத்தம் 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் இன்னும் கூடுதலாக தூய்மை பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
காஞ்சிபுரத்தில் இன்று வேலைவாய்ப்பு முகாம்
காஞ்சிபுரம், ஆக.22- பேரறிஞர் அண்ணாவின் நண்பரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.எம்.அண்ணாமலை அறக்கட்டளை சார்பில் சனிக்கிழமையன்று (ஆக.23) காலை 8.30 மணியளவில், காஞ்சிபுரம் எஸ்எஸ்கேவி மேல்நிலைப்பள்ளியில் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில், 75க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் 10,000 பேருக்கு வேலை வழங்க உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், திருபெரும்புதூர் மற்றும் அருகில் உள்ள செய்யாறு, வந்தவாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாமில், 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் அனைத்து வகையான பட்டப்படிப்புகளுக்கும் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இது வழக்கமான வேலைவாய்ப்பு முகாமாக இல்லாமல் க்யூஆர் கோடு வழங்கப்பட்டு, ஸ்கேன் செய்து அவர்களுக்கு வேலை தேடுவதற்கான யூனிக் ஐடி வழங்கப்படும். இதன்மூலம், அவருடைய விவரங்கள் அறிந்து சம்பந்தப்பட்ட கம்பெனிகளுக்கு வேலை தேடுபவர்களுக்கு விவரங்கள் அனுப்பி வைக்கப்படும். வேலைவாய்ப்பு முகாமை விவசாய வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கிறார்.
குடும்பத் தகராறில் தாய் கொலை: மகன் கைது
சென்னை, ஆக. 22– குடும்ப தகராறில் தாயை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். சென்னை, கொளத்தூர், திருப்பதி தங்கவேல் நகரில் உள்ள வீட்டில் ரூபக் என்பவர் அவரது தாயார் பிரமிளா (60) என்பவருடன் லீசுக்கு வசித்து வந்துள்ளார். ரூபக் என்பவருக்கும் அவரது தாயாருக்கும் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், சுமார் 3 மாதங்களாக ரூபக் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், ரூபக்கின் தாயார் வசித்து வந்த வீட்டை காலி செய்யுமாறு வீட்டு உரிமையாளர் கூறியதை தொடர்ந்து ரூபக், பெங்களூரிலிருந்து, அவரது வீட்டிற்கு வந்தபோது, ரூபக்கிற்கும் அவரது தாயாருக்கும் வாடகை முன் பணத்தொகை கேட்டு வாக்குவாதம் ஏற்பட்டபோது ரூபக் ஆத்திரத்தில் அவரது தாய் பிரமிளாவின் தலையை பிடித்து சுவற்றில் மோதி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்தகாயம் ஏற்பட்டது. இதனால் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தாயார் பிரமிளா சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, தாயாரை கொலை செய்த ரூபக்கை கைது செய்தனர்.
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
சென்னை, ஆக. 22- சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் பலத்த மழையினால் தேங்கி நின்ற தண்ணீரில் மின்சாரம் கம்பி அறுந்து விழுந்தது. அந்த தண்ணீரில் நடந்துச் சென்ற கட்டடத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். ஈஞ்சம்பாக்கம் முனீஸ்வரன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சாமுவேல் (57). இவர் கட்டடத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். சாமுவேல் வெள்ளிக்கிழமை வழக்கம்போல வேலைக்கு புறப்பட்டுச் சென்றார். முன்னதாக வியாழக்கிழமை இரவு தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரை பெய்த மழையினால் ஈஞ்சம்பாக்கத்தில் சாலையிலும்,தாழ்வான பகுதியிலும் தண்ணீர் தேங்கி நின்றது. இதற்கிடையே சாமுவேல் அங்குள்ள பிள்ளையார் கோயில் தெருவில் நடந்து சென்றார். அப்போது பலத்த மழையினால் மின்சார கம்பி அறுந்து, அங்கு தேங்கி நின்ற தண்ணீரில் விழுந்து கிடந்தது. இதனால் தண்ணீரில் மின்சாரம் பாய்ந்திருந்தது. இதைக் கவனிக்காமல் நடந்து சென்ற சாமுவேல், அந்த தண்ணீர் மீது நடந்துச் சென்றார். இதனால் சாமுவேல் மீது மின்சாரம் பாய்ந்தது. அந்த தண்ணீரிலேயே விழுந்தார். இதைப் பார்த்த பொதுமக்கள், சாமுவேலை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களால் மீட்க முடியவில்லை. தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மின்சாரத்தை துண்டித்து சாமுவேலை மீட்டனர். மீட்கப்பட்ட அவர் உடனடியாக ஈஞ்சம்பாக்கத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சாமுவேல் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தங்கம் விலை சற்று குறைந்தது
சென்னை, ஆக. 22– சென்னையில் ஆபணத்தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 73,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 15 குறைந்து ரூ. 9,215-க்கு விற்பனையாகிறது.வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 2 உயர்ந்து ரூ.128 க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1.28 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.