கோவையை சேர்ந்தவர் மூத்த தமிழறிஞர் "கோவை ஞானி" உ டல்நலக்குறைவால் இன்று மரணம அடைந்தார்.
கி. பழனிச்சாமி என்ற இயற்பெயர் கொண்ட கோவை ஞானி 1935 இல் பிறந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழிலக்கியம் கற்றவர். கோவையில் உள்ள சி.எஸ்.ஐ பள்ளியில் தமிழாசிரியராக 30 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார். மார்க்சிய நெறியில் தமிழிலக்கிய ஆய்வில் 30 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்ததுடன், தமிழ் மரபையும் மார்க்சியத்தையும் இணைத்து கீழை மார்க்சியத்தை படைத்துள்ளார்.
கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக 28 திறனாய்வு நூல்கள், 11 தொகுப்பு நூல்கள், 5 கட்டுரைத் தொகுதிகள், 3 கவிதை நூல்கள் ஆகியவற்றை கோவை ஞானி எழுதியுள்ளார். தொகுப்பாசிரியராகவும் பல நூல்களை அவர் வெளியிட்டிருக்கிறார்.
தமிழ்ப் பணிக்காக புதுமைப்பித்தன் ‘விளக்கு விருது’ (1998), கனடா–தமிழிலக்கியத் தோட்ட ‘இயல்’ விருது (2010), எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராயம் வழங்கிய ‘பரிதிமாற் கலைஞர்’ விருது (2013) முதலிய பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
கண்பார்வை குறைந்த போதும் , அனைத்து நூல்களையும் பிறர் துணையுடன் வாசித்து விடும் பழக்கம் கொண்டவர் கோவை ஞானி.நிகழ் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததுடன் பல்வேறு இலக்கிய குழுக்களையும் உருவாக்கி அதை வழிநடத்தியவர் கோவை ஞானி. வயது மூப்பு காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்த கோவை ஞானி இன்று பிற்பகல் உயிரிழந்தார்.