tamilnadu

img

சென்னை: கல்லூரி மாணவர் கொலை… விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்  

பாலியல் ரீதியாக மாணவிகளை மிரட்டிய விவகாரத்தில் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

சென்னை - கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பெரிய ஓபுளாபுரத்தை அடுத்த ஈச்சங்காடு கிராமத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வாலிபர் ஒருவரின் உடல் புதைக்கப்பட்டு இருந்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஆரம்பாக்கம் போலீசார் விரைந்து சென்று உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்தினர். இதில் தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த பிரேம்குமார்(20) கொலை செய்து புதைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் மீனம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார்.  இதனை அடுத்து மாணவர் கொலைக்கான காரணம் குறித்து தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்தியதில் பள்ளி மாணவிகள் இருவரை ஆபாசமாக படம் பிடித்து அதனை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி பணம் பறித்ததே கொலைக்கு முக்கிய காரணமாக இருந்ததாக பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளது.     கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவர் பிரேம் குமார், தனது பகுதியை சேர்ந்த இரண்டு 10 ஆம் வகுப்பு மாணவிகளுடன் பழகி வந்துள்ளார். அப்போது அவர்களை ஆபாசமாக படம் எடுத்துள்ளார்.     இந்த புகைப்படங்களை காட்டி இரண்டு மாணவிகளிடமும் அடிக்கடி பணம் பறித்து வந்துள்ளதாக தெரிய வந்தது. பிரேம்குமார் கேட்ட போதெல்லாம் மாணவிகள் பணம் கொடுத்ததால் அவரின் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மாணவிகள் தவித்து வந்த நிலையில் பாதிக்கப்பட்ட 2 மாணவிகளும், இதுபற்றி இன்ஸ்டாகிராமில் தங்களுடன் பழகி வந்த நண்பர் அசோக்கிடம் தெரிவித்துள்ளனர்.    

அப்போது நண்பர் அசோக் அவனை நான் பார்த்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார். இதன்பிறகு தான் பிரேம்குமார் கடத்தி கொலை செய்யப்பட்டு இருக்கிறார். மாணவிகளுக்காக அசோக் மாணவர் பிரேம் குமாரை கடத்தி கொலை செய்திருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக இரு மாணவிகளின் நண்பர்களான 4 பேரை பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தலைமறைவாக உள்ள அசோக்கை கண்டுபிடிக்கும் பணியில் ஆரம்பாக்கம் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.     

அதனைதொடர்ந்து மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டதில், பிரேம்குமார் அடிக்கடி மிரட்டி பணம் பறித்துக்கொண்டே இருந்ததாகவும், அதுபற்றி தங்களது இன்ஸ்டாகிராம் நண்பரான அசோக்கிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பிடிபட்ட 2 மாணவிகளிடமும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக உள்ள மாணவிகளின் நண்பரான அசோக்கை கைது செய்ய போலீசார் தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.      

;