tamilnadu

பெண் நடத்துநர்களை பணி நிரந்தரம் செய்ய புதுவை அரசுக்கு சிஐடியு கோரிக்கை

பெண் நடத்துநர்களை பணி நிரந்தரம் செய்ய புதுவை அரசுக்கு சிஐடியு கோரிக்கை

புதுச்சேரி, ஆக.11- உயர் நீதிமன்ற உத்தரவுப்படி பிஆர்டிசி பேருந்து பெண் நடத்துநர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று சிஐடியு புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சிஐடியு புதுச்சேரி மாநிலச் செயலாளர் ஜி.சீனுவாசன் வெளியிட்ட அறிக்கை வருமாறு:  புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் (பிஆர்டிசி) பணியாற்றும் 12 பெண் நடத்துநர்கள் 15 ஆண்டுகள் சேவை முடித்தும் நிரந்தர ஊழியர்களாக நியமிக்க நிர்வாகம் மறுத்துவிட்டது. தங்களைப் பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என்ற கோரிக்கை நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்ட நிலையில் தொழிலாளர்கள் நீதிமன்றத்தை அணுகினார்கள். கீழமை நீதிமன்றம் அவர்களது கோரிக்கைகளை ஏற்று நீதி வழங்காத நிலையில் சென்னை உயர்நீதி மன்றத்தைப் பெண் தொழிலாளர்கள் அணுகினார்கள். தற்போது சென்னை உயர்நீதிமன்றம் தொழிலாளர்களின் கோரிக்கைகள் மிகவும் நியாயமானது என்று தீர்ப்பளித்துள்ளது. மேலும் நிர்வாகம் பத்திரிகையில் விளம்பரம் கொடுத்து வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் முறையாகத் தேர்ந்தெடுத்த பெண் ஊழியர்கள் நிரந்தரப்படுத்துவதற்கு அனைத்து வகையிலும் ஏற்றவர்களாக இருக்கின்றனர். இச்சூழ்நிலையில் ஊழி யர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நிர்வாகம் நிராகரிக்க முடியாது. எனவே இன்னும் மூன்று மாதங்களுக்குள் தொழிலாளர்களை நிரந்தரம் செய்து உத்தரவு வழங்க வேண்டும் என்று புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழக நிர்வாகத்திற்குக் கடந்த ஜூலை மாதம் சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இத்தீர்ப்பைச் சிஐடியு வரவேற்பதோடு, இது உழைத்துப் பிழைக்கும் அனைத்து ஒப்பந்த, தற்காலிகத் தொழி லாளர்களுக்குக் கிடைத்த வெற்றி என்று  சிஐடியு கருதுகிறது. நீதிமன்றம் மூலம் வெற்றி பெற்ற புதுச்சேரி சாலைப் போக்கு வரத்துக் கழகப் பெண் நடத்துநர்கள் அனை வருக்கும் சிஐடியு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. புதுச்சேரி அரசு நிர்வாகத்தின் கீழ் பணியாற்றி வரும் தற்காலிக ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் குறைந்தபட்சம் 248 நாட்கள் பணிபுரிந்தவர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை ஏற்றுச் செயல்படுத்திட வேண்டும் என்று சிஐடியு புதுச்சேரி முதலமைச்சர், தலைமைச் செயலாளரைக் கேட்டுக்கொள்கிறது. அதே சமயம் கொல்லைப்புற நியமனங்கள் செய்யக் கூடாது என்றும் புதுச்சேரி அரசைச் சிஐடியு வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.