சென்னையில் 2-வது ஏ.சி. மின்சார ரயில் விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது
சென்னை, ஆக. 21- சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே ஏ.சி. மின்சார ரயில் முதன் முதலாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் குறிப்பிட்ட கால அட்டவணைப்படி இயக்கப்படுகிறது. ஒருவழித் தடத்தில் மட்டும் இயக்கப்படுவதால் மற்ற வழித்தடத்திலும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.இதையொட்டி மற்றொரு மின்சார ரயில் தயாரிக்கும் பணியை பெரம்பூர் ஐசிஎப் தொழிற்சாலை மேற்கொண்டது. கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் இந்த பணி இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. 10 பெட்டிகளுடன் தயாராகும் ஏசி ரயில் விரைவில் மற்றொரு வழித்தடத்தில் இயக்குவதற்கு சென்னை ரயில்வே கோட்டம் திட்டமிட்டுள்ளது. இதே போல ஹைட்ரஜன் ரயிலும் பெரம்பூரில் தயாரிக்கப்பட்டு வருகிறது. பணிகள் நிறைவடையும் சூழலில் சோதனை ஓட்டம் செய்யப்படுகிறது. முதன் முதலாக ஹைட்ரஜன் மூலம் இயக்கப்படும் ரயில் இதுவாகும். இந்த ரயில் வட மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
சென்னையில் கிராம திருவிழா ஆக.24 வரை நடைபெறுகிறது
சென்னை, ஆக.21- சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் செம்பொழில் அமைப்பு சார்பில் சென்னையில் ஒரு கிராமத் திருவிழா நடைபெறுகிறது. நகரத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு கிராம திருவிழா மற்றும் பாரம்பரிய அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த விழா நடக்கிறது. இந்த கிராமத் திருவிழாவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்து உள்ளே இடம்பெற்றுள்ள ஸ்டால்களை பார்வையிட்டார். வியாழனன்று தொடங்கிய இவ்விழா ஆக.24 வரை நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் பாரம்பரிய உணவு வகைகள், தானிய வகைகள், விவசாயம் சார்ந்த புத்தகங்கள், மரங்களால் ஆன கைவினைப் பொருட்கள், மாட்டு வண்டி, குதிரை வண்டி, வரி அடித்தல், இளவட்டக்கல் உள்ளிட்டவை வைக்கப்பட்டு கிராமத்தை கண்முன் காட்சிப்படுத்தும் விதமாக 120க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது.
உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று நடைபெறும் இடங்கள்
சென்னை, ஆக. 21 - ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் சென்னையில் வெள்ளியன்று (ஆக.22) நடைபெறுகிறது. இடங்கள் விவரம்: வார்டு-11 எல்லையம்மன் கோயில் தெரு ஸ்ரீராம் தயாள் கேம்கா விவேகானந்தா வித்யாலயா ஜூனியர் கல்லூரி, வார்டு-21 பாடசாலை தெருவில் ஜெயம் மஹால், வார்டு-30 கொளத்தூர், கல்பாளையம் லட்சுமிபுரம், பெரம்பூர் ரெட்ஹில்ஸ் நெடுஞ்சாலை ஸ்ரீசெல்வ லட்சுமி திருமண மண்டபம், வார்டு-39 புதுவண்ணாரப்பேட்டை, செரியன் நகர், சென்னை மேல்நிலைப்பள்ளி மைதானம், வார்டு-71 பெரம்பூர், பள்ளி சாலை, சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வார்டு-88 பாடி, டி.வி.எஸ். நகர் 2வது தெரு அன்னை மண்டபம், வார்டு-108 சேத்துப்பட்டு, மேயர் ராமநாதன் சாலை, மாநகராட்சி விளையாட்டுத் திடல், வார்டு-118 ராயப்பேட்டை, ஸ்ரீநிவாச பெருமாள் சன்னதி தெரு, மாநகராட்சி சமுதாயக் கூடம், வார்டு-146 மதுரவாயல், பி.எச். சாலை சீதாலட்சுமி திருமண மண்டபம், வார்டு-159 மீனம்பாக்கம், காமராஜர் சாலை, ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி, வார்டு-195 துரைப்பாக்கம், ஏலீம் மெட்ரிகுலேசன் பள்ளி ஆகிய 11 வார்டுகளில் நடைபெறுகிறது. இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்.
18 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 இளைஞர்கள் கைது
அம்பத்தூர், ஆக. 21- பூந்தமல்லி பீர் தயாரிக்கும் நிறுவனம் அருகில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக கையில் பையுடன் வந்த இளைஞர்களை போலீசார் வழிமடக்கி விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக தகவலை தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் கொண்டு வந்த பைகளை சோதனை செய்த போது, அதிலிருந்து 18 கிலோ எடையுள்ள கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சா கடத்தியவர்கள் கேரளாவின் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீஜித் (26), முகம்மது ஆசீக் (25), அபிஜித் (18) ஆகியோர் என்பதும் தெரியவந்தது. புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து, 3 பேரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.