tamilnadu

img

தேர்வில் மத துவேஷத்தை வளர்க்கும் சிபிஎஸ்இ-பேராசிரியர் ஜவாஹிருல்லா கண்டனம்

குஜராத்தில் சிபிஎஸ்இ வினாத்தாளில் மத துவேஷத்தை வளர்க்கும் வகையில் கேள்வி கேட்ட சிபிஎஸ்இக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்எச்.ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குஜராத் மாநிலத்தில் 12-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் பருவம் 1-ற்கான தேர்வில் “2002 இல் குஜராத் மாநிலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவு, பரவலாக இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை எந்த அரசாங்கத்தின் கீழ் நடந்தது? என்ற கேள்வி வினாத்தாளில் இடம்பெற்றுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

கல்வி கற்பிப்பதின் முக்கிய நோக்கமே சமத்துவமும், மனிதாபிமானம் மிக்க சமூகத்தை கட்டமைப்பதற்காக தான் இருக்க வேண்டும். இந்த உயர்ந்த நோக்கத்தை சிதைக்கும் வகையில் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இது போன்ற கேள்விகள் இடம்பெற்று இருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது.

சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான மனநிலையை மாணவர்களின் மத்தியில் விதைப்பது இந்தியாவின் எதிர்காலத்தை மிகப்பெரிய அளவில் பிளவுபடுத்தும் நோக்கம் கொண்டதாக அமையும்.

பொதுவாக வினாத்தாள்கள் பெறப்பட்டு கல்வி உயரதிகாரிகள் வாயிலாக மேற்பார்வை செய்யப்பட்ட பின்னரே மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கும் முறை தற்போது உள்ளது. பிரச்சனைகள் பெரிதாகி விட்டவுடன் வினாத்தாள் தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை என்று சிபிஎஸ்இ நிர்வாகம் தப்பித்துக்கொள்ள பார்க்கிறது.

இதற்கு முன்னரும் பாடத்திட்டத்திலும் வினாத்தாளிலும் பல குளறுபடிகளை சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான முன்னெடுப்புகள் நிகழ்ந்திருக்கின்றன.கல்வியின் நோக்கத்தையே சிதைக்கும் இந்த முயற்சியினை முன்னெடுக்கும் சிபிஎஸ்இ பாடத்திட்ட குழுவையும் ஒன்றிய அரசையும் வன்மையாக கண்டிக்கிறேன்.இது போன்று இனிவரும் காலங்களில் நிகழாத வண்ணம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

;